சூழலின்
தேவை கருதி முன் செல்லும் பாதையின் அடிகளில் ஒன்றாக…
2013 நவம்பர் புரட்சி தினத்திற்கு முதல்நாள் விருதுநகர் மாவட்டச்
செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் சமுத்திரகனியின் தலைமையிலும், மாவட்டச் செயலர் தோழர்
ரவீந்திரன் அவர்களின் தொடக்கஉரையுடனும் நடைபெற்றது. செயற்குழுவில் மாவட்ட மாநாட்டை
மார்ச் மாதம் முதல் வாரத்தில் அருப்புக்கோட்டையில் நடத்துவது என்ற முடிவும் அது தொடர்பான
திட்டமிடலும் செயல் வடிவம் பெற்றன.
தொடர்ந்து மாநில துணைத் தலைவர் தோழர் வெங்கட்ராமன் ‘தலைமைத்துவம்’
என்ற தலைப்பில் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள் மற்றும் முன்னணி தோழர்கள்
என்ற வகையில் கலந்து கொண்ட 56 தோழர்களுக்குப் பயிற்சி அளித்தார். தலைமைத்துவத்தின்
கூறுகளான, ஆளுமை, வாழ்க்கைத்திறன், குழுவாதல், அணி உணர்வு, இலக்கை நிர்ணயித்தல், நேர
நிர்வாகம், செயல்படுத்தலும் மதிப்பிடலும், சுயவிமர்சனப் பண்பு, அறிவியல் பார்வையும்
அறிவார்ந்த அனுகுமுறையும், பகிர்தல், அரவணைத்தல், அணிதிரட்டல் என அனைத்தையும் தெளிவாக
எடுத்துக் காட்டுகளுடன் முன்வைத்தார். முதுகலை மேலாண்மைப் படிப்பிற்கான பாடங்களை அனைத்துத்
தோழர்களுக்கும் புரியும்படி விளக்கினார். இவை நம் அன்றாட சங்கப் பணிகளில் எந்த அளவிற்கு
அவசியமானவை என்பதையும் தெளிவுபடக் கூறினார். செயலூக்கமிக்க விருதுநகர் மாவட்டத் தோழர்கள்
மேலும் மேலும் அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இரண்டு மணிநேரம் நடைபெற்ற
இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
தொடர்ந்து நமது சங்கத்தின் முன்னாள் மாவட்ட நிர்வாகியும் அதிகாரிகள்
சங்கத்தின் இன்றைய மாநில நிர்வாகிகளில் ஒருவருமாக உள்ள தோழர் ராதாகிருஷ்ணன் CDA விதிகள்
பற்றிய வகுப்பை ஒருங்கிணைத்தார். நிறுவனம் தொடங்கி 6 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவான
விதிகள் பற்றிய வெறும் ஒப்பித்தலாக இல்லாமல், விதிகளில் நமக்குப் பாதகமான விஷயங்கள்
எவை எவை? அவற்றை நமக்குச் சாதகமாக நாம் எப்படி மாற்றிக் கொள்வது. விதிகள் காட்டும்
ஒழுங்கிளைத்தாண்டி, நமக்குத் தேவையான அடிப்படையான சுய ஒழுங்கு, நாம் அணியாதல் மற்றும்
அதன் அவசியம் என விரிவான தளத்தில் விளக்கமளித்தார். ஊழியர்களை தற்காத்தலுக்கான உதவியாளர்களை
நம்மாவட்டத்தில் உருவாக்க வேண்டிய தேவையை உணர்த்தியதுடன் அதற்கான முயற்சியையும் தோழர்
ராதாகிருஷ்ணனின் உதவியுடன் செயல்படுத்துவது என்ற முடிவுடன் வகுப்பு நிறைவு பெற்றது.
மாவட்டப் பொருளாளர் தோழர் வெங்கடப்பன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment