சத்தமில்லாமல் உலகை எளிமையான,போற்றுதல்கள் இல்லாத அன்பால் நிறைத்து விட்டுப்போகும் மாயம் அவர்களுக்கு வரமாகவும்,சாபமாகவும் தொடர்ந்து வந்திருக்கிறது. பல மாமனிதர்கள் தந்தைகளால் ஆக்கப்பட்டு உள்ளார்கள். அதைப்பற்றிய ஒரு சின்னத்தொகுப்பு இதோ
உலகின் எல்லா மூலைகளையும் முற்றுகையிட்ட சிவப்பு சித்தாந்தத்தை தந்த காரல் மார்க்ஸ் அவர்களை அவர் போக்கில் விட்ட,என்ன செய்தாலும் ஏன் என்று கேட்காத அதீத அன்புக்காரர் அவர் தந்தை. "உன் பையன் சீரழிகிறான்.பார்த்துக்கோ !"என ஊரில் உள்ளவர்கள் அவரை உசுப்பேற்றிய பொழுதெல்லாம் மகனுக்கு இன்னம் கொஞ்சம் கூடுதலாக பணம் அனுப்பிய வித்தியாசமான தந்தை அவர். காரல் மார்க்ஸ் இறக்கும் வரை அந்த இணையில்லா தகப்பனின் படம் சட்டைப்பையில் மகனின் துன்பங்களுக்கு நடுவே நம்பிக்கை கீற்றாக மின்னிக்கொண்டு இருந்தது
முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியில் வாழ்க்கை வாழ்ந்தவர் மோதிலால் நேரு . வீட்டில் அந்த காலத்திலேயே மின்சாரம்,வெள்ளையரைப்போல உணவு பழக்கம்,மகனை பள்ளியில் இருந்து கூட்டு வர எல்லா பள்ளியின் எல்லா வாசல்களிலும் கார்கள்,வீட்டில் நீச்சல் குளம்,புலால் உணவு என ஏகபோக வாழ்க்கை அவருடையது . எதை வேண்டுமானாலும் விடுத்து அவரால் இருக்க முடியும் ; பிள்ளைப்பாசம் என்பதை மட்டும் விட முடியாத ஒரு நபராக அவர் இருந்தார். லட்சங்களில் வருமானம் ஈட்டித்தந்த வக்கீல் தொழிலை மகனுக்காக விட்டு வெளியேறினார். ஜவகர்லால் நேருவுக்காக தானும் விடுதலைப்போரில் ஈடுபட்டார் .
சிறையில் மகன் மீது கொண்ட பாசத்தால் உள்ளே போனவர் வீட்டு சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டார் . அதைக்கொண்டு வர சொன்னார் , நேரு அப்படியே சாப்பாட்டை வெளியே எறிந்து விட்டு ,"அப்பா எத்தனை மக்கள் எளிய உணவு உண்டு நாட்டுக்காக போராடுகிறார்கள்.என கடிந்து இவரை விடுதலைப்போரில் ஈடுபட வைத்தார் . வெறுந்தரையில் பிள்ளைப்பாசத்துக்காக படுத்து நாட்டு விடுதலைப்போரில் பங்குகொண்டார் மனிதர் . அரச மாளிகைக்கு ஈடாக கட்டப்பட்ட தன்னுடைய ஆனந்த பவனத்தை நாட்டு விடுதலைப்போருக்கு அர்ப்பணித்தார் மனிதர்
லிங்கன் அப்பா ஓயாமல் உழைத்தவர் ;இதுதான் வேலை என்று என்றைக்கும் வகுத்துக்கொண்டது இல்லை மனிதர் ஓயாத உழைப்பு,யாரையும் ஏமாற்றக்கூடாது . சக மனிதரிடம் அன்பாக இருக்கவேண்டும் என்பது தான் வாழ்க்கையின் நோக்கம் என்று வாழ்ந்த அற்புத ஆத்மா அவர். அதையே வாழ்நாள் முழுக்க லிங்கன் கடைபிடித்தார். தன் அப்பா தனக்கு சேர்த்து வைத்து விட்டுப்போன செல்வங்கள் அவை என ஆனந்த கூத்தாடினார். "உன் தந்தை தைத்த செருப்பு என் கால்களை அலங்கரித்து கொண்டிருக்கிறது லிங்கன் " என்று ஒரு செனட்டர் சொன்னபொழுது லிங்கன் புன்னகை மாறாமல் ,"இன்னமும் அந்த செருப்பு பிய்ந்து போகாமல் இருக்கிறது என்றால் அது என் தந்தையின் உழைப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் செருப்பை கொடுங்கள்;தைத்து தருகிறேன். என் தந்தை கற்றுத்தந்த தொழில் அல்லவா அது . எப்பொழுதும் கைவிடாது " என சொன்னார்
விம்பிள்டனை பெடரரிடம் இருந்து நடால் வென்ற பின்னர் வாழ்வின் மிகவும் வலிமிகுந்த கட்டம் நடாலுக்கு காத்திருந்தது. அவருக்கு அடிக்கடி காலில் வலி வர ஆரம்பித்து இருந்தது. இடது காலில் ஒரு சிறிய எலும்பில் சிக்கல் இருந்தது. இளம் வயதிலேயே அந்த குறைபாடு இருந்து அதை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அதனால் அதன் சிக்கல் பெரிதாகி டென்னிஸ் வாழ்க்கையே நடாலுக்கு முடியக்கூடும் என்று மருத்துவர் எச்சரித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றோடு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருந்து வெளியேறுவது நடந்தது. கண்ணீர் விட்டு அழுதார் நடால்.
அதுவரை எப்பொழுதும் பெரும்பாலும் வாயைத்திறந்து பேசாத அவரின் அப்பா பேசினார்,”பார்த்துக்கொள்ளலாம் ! இது இல்லாவிட்டால் என்ன ? கோல்ப் ஆடப்போகலாம் நீ ! உனக்கு நிரம்ப பிடித்தது இல்லையா அது ? மேலும் அப்படி ஆட முடியாமல் போகலாம் என்று தான் மருத்துவர் எச்சரித்து இருக்கிறார். அதுவே நடக்க வேண்டும் என்று அவசியமில்லை !” என்று தந்தை சொல்ல உற்சாகம் ததும்ப மீண்டும் மீண்டு வந்தார் நடால். போட்டிகளில் கலந்து கொண்டார். பெடரரை ஹார்ட் கோர்ட்டில் வென்றதும் நம்பிக்கை பிறந்தது. அப்படியே அடித்து ஆடி நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளையும் இளம் வயதில் வென்றவர் என்கிற சாதனை அவர் வசம் வந்து சேர்ந்தது
பீலே பிரேசிலின் மத்திய பகுதி மாநிலம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். வறுமையான குடும்பம்,அப்பா கால்பந்து ஆடுவதை கண்கள் விரிய பீலே கண்டார். அவரின் அப்பா ஒரே ஒரு போட்டியில் தலையால் மட்டுமே ஐந்து கோல்கள் அடித்ததை பார்த்து இப்படி ஒரே ஒரு முறை சாதனை புரிந்துவிட்டால் போதுமே என்று கால்பந்து மீது வெறிகொண்டு அவர் விளையாட வந்தார். இறுதிவரை தன்னுடைய தந்தையின் சாதனையை அவர் முறியடிக்கவே இல்லை. நான்கு கோல்களை ஒரே போட்டியில் தலையால் தட்டி அடித்த கணம் அவருக்கு வாய்த்தது. "என் தந்தையின் சாதனை என்றைக்கும் அப்படியே இருக்கட்டும் !" என்று உணர்ச்சி பெருக்கோடு விடைபெற்றார் கருப்பு முத்து ! நடுவில் மூன்று உலகக்கோப்பைகள் பிரேசில் வசம் வந்திருந்தன
சச்சின் அப்பா மராத்தி எழுத்தாளர் ; கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. "நான் டென்னிஸ் ஆடப்போகிறேன் !"என்று சச்சின் சொன்னாலும் சரி என்பதே அவரின் பதிலாக இருக்கும் . நான் தேர்வெழுத போவதில்லை போட்டி இருக்கிறது என்றாலும் உன் இஷ்டம் என்பதே அவரின் பதில். கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் என்னவென்று சச்சின் அவரிடம் விளக்கி சொன்னதில்லை,ஆனால்,"உனக்கு பிடித்ததை செய் !"என கைதட்டி கொண்டாடிய அப்பா அவர். மகனை எல்லாரும் புகழ்கிறார்கள் என்று தெரியும் ; பெரும்பாலும் சச்சின் இருக்கும் பொழுது எந்த முகமாற்றமும் காட்ட மாட்டார். ஆனால், மூத்த பெண்ணை மணக்கிறேன் என்று சச்சின் வந்து நின்ற பொழுதும் நோ சொல்லாத மனிதர் . ஆனால்,ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தி சொல்வார் தன் செயல்களின் மூலம் .உலககோப்பை 1999 வருடம் வந்தது ; தந்தைக்கு உடல்நிலை மோசமான பொழுது சச்சின் வெளிநாட்டில் ஆடிக்கொண்டு இருந்தார். உயிர் போகிற தருவாயிலும் ,"செய்கிற கடமையே முக்கியம் ; வரவேண்டாம் . அங்கே அவனை ஆடச்சொல்லுங்கள் !"என்று அவர் சொன்னதை சொல்லித்தான் சிவந்த கண்களோடு சச்சினை வீட்டை விட்டு அனுப்பினார்கள். கென்யாவுடன் நூற்றி நாற்பது ரன்களை அடித்த பொழுது அந்த சதத்தை தலையை தூக்கி தன் அப்பாவுக்கு சமர்பித்தார் சச்சின். இன்று வரை தொடர்கிறது அது. சச்சினின் ஆட்டம் அவர் அப்பாவுக்கு புரியாமல் இருக்கலாம்,அன்பின் மொழி புரிந்திருக்கும்.தன் பிள்ளைகளுக்காக இப்படி உதவிய தந்தைகள் ஒருபுறம் என்றால் வித்தியாசமான தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சொத்தில் தொன்னூறு சதவிகிதத்துக்கு மேல் அறக்காரியங்களுக்கு கொடுத்து விட்டு கைகட்டி நிற்கிறார் பில்கேட்ஸ். முழுதாக கொடுத்துவிட்டு என் மகன் சொந்தக்காலில் நிற்பான் என்கிறார் ஜாக்கிசான்.அப்பாக்கள் வரலாறு முழுக்க நிரம்பிக்கிடக்கிறார்கள் ; வரலாறாகவே இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
நன்றி :- விகடன்