உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் மேகி மட்டும்தான் தடை செய்யப்பட்டதா என்று பார்த்தால், எக்கச்சக்கமான பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கெல்லாக்ஸ், ரான்பாக்ஸி, ஏம்வே போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை FSSAI (Food Safety and Standards Authority of India) அமைப்பு, உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்யாததால் தடை செய்துள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. FSSAI அமைப்பின் வலைதளத்தில் தடை செய்யப்பட்டுள்ள உணவு பொருட்களின் லிஸ்ட் பதிவேற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி வரை அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த லிஸ்ட்டைப் படித்தாலே பகீரென்று இருக்கிறது. ஏனென்றால், இதில் பல தயாரிப்புகளின் பெயர்கள் மக்கள் மத்தியில் பரிச்சயமானவை. அதில் இருந்து சில குறிப்பிட்ட தயாரிப்புகளைப் பார்ப்போம்.
ஒவ்வொரு வருடமும் தான் சோதித்து வரும் உணவுப் பொருட்களின் சாம்பிள்களில் கலப்படத்தின் அளவு அதிகரித்து வருவதாக FSSAI அமைப்பு தெரிவித்துள்ளது. 2011-2012 ஆண்டுவாக்கில் 64,593 சாம்பிள்களை சோதித்தபோது, 8,247 சாம்பிள்களில் கலப்படம் இருந்திருக்கிறது. இது 12.8 சதவிகிதம். 2012-13 ஆண்டுவாக்கில் இந்த சதவிகிதம் 14.8 சதவிகிதமாக உயர்ந்திருக்க, 2013-14 ஆண்டுவாக்கில் 18.8 சதவிகிதமாக இருக்கிறது.
உணவுக் கலப்படத்தில் தமிழ்நாடு!
இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம், கலப்படம் செய்யப்பட்டிருப்பின் எத்தனை நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயம். இதில் தமிழ்நாட்டை மட்டும் கணக்கெடுத்து கொள்வோம்.தமிழகத்தில் FSSAI அமைப்பின் அங்கீகாரம் பெற்ற உணவு சோதனை ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை 7. இவை உணவு பாதுகாப்பு மற்றும் தரம் 2006 சட்டத்தின் செக்ஷன் 47 படி தயாரிப்புகளின் சாம்பிள்களை எடுத்து ஆய்வு செய்யலாம். FSSAI அமைப்பின்படி, 2011-2012-ம் ஆண்டுவாக்கில் தமிழ்நாட்டில் 7,394 தயாரிப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 624 தயாரிப்புகளில் கலப்படம்/தவறான பிராண்டிங் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 624 தயாரிப்புகளை உருவாக்கிய நிறுவனங்களில் எந்த ஒரு நிறுவனத்தின் மீதும் ஒரு சிவில்/கிரிமினல் வழக்கு கூட பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(அனைத்து மாநிலங்களுக்கான மொத்த ரிப்போர்ட்)
2012-13 ஆண்டுவாக்கில், தமிழகத்தில் 474 பொருட்கள் கலப்படத்திற்காக ஆய்வு செய்யப்பட்டிருக்க, இதில் 78 தயாரிப்புகளில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 48 வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. அதிலும், 2 வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 2013-14 ஆண்டுவாக்கில், 707 சாம்பிள்கள் சோதனைக்கு வந்துள்ளன. அதில் 658 சாம்பிள்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளன. 261 சாம்பிள்களில் கலப்படம்/தவறான பிராண்டிங் இருப்பது உறுதி செய்யப்பட்டு, 8 கிரிமினல் வழக்குகளும், 40 சிவில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதில் 16 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 6,59,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பெறப்பட்டுள்ளது.மேலும் அதிர்ச்சி தரக்கூடியது 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள். இந்த சமயத்தில் 1,299 சாம்பிள்கள் சோதனைக்கு வந்துள்ளன. 1,207 சாம்பிள்கள் மட்டும் சோதனை செய்யப்பட்டுள்ளன. 487 தயாரிப்புகளில் கலப்படம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 11 கிரிமினல் வழக்குகளும், 177 சிவில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதில் 45 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 44 வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டு 13,43,000 ரூபாய் பெறப்பட்டுள்ளது.
2014 முதல் இப்போது (2015) வரை தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகளில் இதுவரை 2,939 சாம்பிள்கள் சோதனைக்கு வந்துள்ளன. 2,873 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதில் 1,047 சாம்பிள்களில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 64 கிரிமினல் வழக்குகளும், 486 சிவில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. 203 வழக்குகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மொத்த அபராதத் தொகையாக 34,99,000 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உணவுக்கலப்படம் பெருகி வருவதற்கு மேலே கூறப்பட்டுள்ள தகவல்களே சான்று. நினைத்துப் பாருங்கள். ஒரு ஆண்டுக்குள் உணவுக் கலப்படத்துக்காக 64 கிரிமினல் வழக்குகள்! 2015 - 2016 ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?!
நன்றி :-விகடன்
No comments:
Post a Comment