Sunday, June 14, 2015

ஐடி உலகம் 1: கனவுலகின் இருட்டுப் பக்கங்கள்

ஓவியம்:முத்து


வானுயர்ந்த கண்ணாடிக் கட்டிடம். அதன் குளிர் படர்ந்த அறைக்குள் தனியொரு கேபினில் வேலை. கை நிறைய சம்பளம். மனம் நிறைய நிம்மதி. மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவரும் மெக்டொனால்ட்ஸ் போகலாம். ‘காபி டே’வில் கோல்டு காபி அருந்தலாம்.ஃபீனிக்ஸ் மாலில் பொழுது போக்கலாம். ‘வாட்ஸ் ஆப் டியூட்’ என நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிலாம். செல்பி எடுக்கலாம். இப்படி ஐடி துறை பற்றிய கனவுகள் நீள்கின்றன.சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றில் பறக்கும் வால்வோ பேருந்துகளில் புஷ் பேக்கைச் சாய்த்து ஜஸ்டின் பைபரையோ, அனிருத்தையோ ஹெட் போன் வழியாக ரசித்தபடி சிட்டி செண்டர், ஸ்கை வாக் என மால்களில் உற்சாக வலம் வரலாம் என்பது ஐடி துறையில் நுழைய விரும்பும் ஒவ்வொருவரின் விருப்பமாகவே உள்ளது.ஆனால், இந்த கனவுலகத்துக்கு ஏராளமான இருட்டுப் பக்கங்கள் உள்ளன. கண்ணாடிக் கட்டிடங்களுக்குள் கண்ணீர்க் கதைகளும் ஏராளம்.உறவுச் சிக்கல், பணிச்சுமை, டி.எல். தொல்லை, மேனேஜர் மிரட்டல், கிளைண்ட் குடைச்சல், அப்ரைசல் குளறுபடி, எம்ப்ளாயீ பேராமீட்டர் என ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐடி ஊழியர்கள், உச்சகட்டமாக வேலையிழப்பையும் சந்திக்கிறார்கள்.“எனது வேலையைக் காப்பாற்றிக் கொடுங்கள்” என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறிய கர்ப்பிணி ரேகாவில் தொடங்கி மத்திய கைலாஷ் பக்கம் கண்களைக் கட்டி போராடிய ஊழியர்கள்வரை ஐடியின் வேறு முகத்தைச் சந்திப்பவர்கள் ஏராளம்.வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது வருடத்தில் திருமணம். புறநகரில் டபுள் பெட்ரூம் வீடு. சின்னதாக ஒரு ஸ்விஃப்ட் கார் என வாழ்க்கையைத் தொடங்கிய கொஞ்ச நாளில், வேலையிழப்பை அறிவித்து வருகிற இ-மெயில் எத்தனை கொடூரமானது! ப்ரமோஷன், ஹைக் எனத் தொடர்ச்சியான சந்தோஷங்களை நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி வைத்துக் கொண்டாடியவர், மாநகரின் தூசி மண்டிய டாஸ்மாக்கில் வேலை இழந்த துக்கத்தோடு தொலைவதும் இங்கு சகஜம்.ஒரு தேன்கூட்டில் நெருப்பு வைத்ததைப் போல், கொத்தாக 25 ஆயிரம், 15 ஆயிரம், 8 ஆயிரம் என்று ஊழியர்களை நிறுவனங்கள் வெளியேற்றுகின்றன.இந்த ஊழியர்களுக்காகக் குரல் கொடுக்க வலுவான சங்கங்கள் கிடையாது. அவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்கான கொள்கை முடிவுகளை எடுக்க அரசுக்கும் மனம் இல்லை.பன்னாட்டு நிறுவனங்களுக்கென்று பன்னாட்டு விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஏடிஎம் தேய்த்தெடுத்த முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்குப் புதுத் துணி வாங்கிக் கொடுத்த ஈரப்பசை காய்வதற்குள், வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கின்ற சாபம் ஐடியில் சாதாரணம். இப்படியாக ஐடி என்னும் கனவுலகின் இருட்டுப் பக்கங்கள் ஏராளம்.அவர்களுக்கான தீர்வுகள் என்ன? அலுவலகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒருவரை, 15 வார்த்தையிலான மின்னஞ்சல் தூக்கியெறிவது எப்படி? பதில்களைத் தேடிப் பயணிப்போம்.
                                 நன்றி :- தி ஹிந்து 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...