பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஐந்து உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்களில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஏப்ரல் 16, 2013 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 18 சங்கங்கள் போட்டியிட்டாலும், பிரதான போட்டி என்பது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும்,என்எப்டிஇ (பிஎஸ்என்எல்) சங்கத்திற்கும் இடையேதான்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிஎஸ்என்எல்-இல் உள்ள டிஇபியு, எஸ்இடபிள்யுஏ, பிஎஸ்என் எல்எப்என்டிஓபிஇஏ, பிஎஸ்என்எல் எம்எஸ் மற்றும் என்எப்டிபிஇ ஆகிய சங்கங்களுடன் கூட்டணி வைத்து ‘செல்போன்’ சின்னத்தில் போட்டியிடுகிறது. என்எப்டி சங்கம், எஸ்என்ஏடிடிஏ, பிஎஸ்என்எல் இஎஸ், பிஎஸ்என்எல் பிஇடபிள்யுஏ, ஏஐபி சிடிஇஎஸ் மற்றும் பிஎஸ்என்எல்இசி ஆகிய சங்கங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.
இந்த தேர்தலில் இந்திய நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-ல் பணி புரியும் 2,04,796 ஊழியர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 1,15,000. (இதில் கூட்டணி சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை). என்எப்டிஇ சங்கத்தின் உறுப்பினர் எண் ணிக்கை 45,000க்கும் குறைவுதான். எனவே ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ள 6-வது சங்க அங்கீகார தேர்தலிலும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கம்பீரமாக வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக தொடர் வெற்றி என்ற சாதனையை படைக்க உள்ளது. வெற்றி நிச்சயம்.
ஜனநாயகத்தின் பாதுகாவலன் : பிஎஸ்என்எல்-ல் ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கமான பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், விகிதாச்சார அடிப்படையில் சங்க அங்கீ காரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்திடம் வைத்து போராடி வந்தது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பிஎஸ்என்எல் நிறுவனம், புதிய அங்கீகார விதிகளை உருவாக்கி உள்ளது. கடந்த ஐந்து சங்க அங்கீகார தேர்தல்களிலும் அதிக வாக்குகளை பெறும் ஒரே சங் கத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடைபெற உள்ள ஆறாவது சங்க அங்கீகார தேர்தலில், 50 சதவிகிதத்திற்கும் மேல் ஒரு சங்கம் வாக்குகளைப் பெற்றது என்றால்/ ஒரே சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். 50 சதவிகித வாக்குகளை யாரும் பெறவில்லை என்றால், 35 சதமான வாக்குகளை பெறும் சங்கம் முதன்மை சங்கமாகவும், அடுத்து 15 சதமான வாக்குகளை பெறும் சங்கம் இரண்டாவது அங்கீகார சங்கமாகவும் அங்கீகரிக்கப்படுவார்கள். 2 சதவிகித வாக்குகளை பெறும் சங்கங்களுக்கு சில தொழிற்சங்க சலுகைகள் வழங்கப்படும்.
‘ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் தான்’ என்று என்எப்டிஇ சங்கம் முதலில் முழங்கியது. இரண்டாவது தேர்தலில் தோற்கும்வரை இதைத்தான் பறைசாற்றியது. தேர்தலில் தோற்றவுடன், ‘இரண்டாவது சங்கத் திற்கும் அங்கீகாரம் கொடு’ என்று நிர்வாகத்திடம் மன்றாட ஆரம்பித்தது. ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்தான் முதலில் இருந்தே, தொடர்ந்து விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்கவேண்டும் என கொள்கை அடிப்படையில் நின்று போராடி வெற்றியும் பெற்றுள்ளது. எனவே ஜனநாயகத்தின் பாதுகாவலன் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம்தான்.
பிஎஸ்என்எல்-ன் பாதுகாவலன் : கார்ப்பரேட் நிறுவனங்களின், தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இந்திய அரசாங்கம் இயங்குகிறது. இவர்களின் கட்ட ளைக்கு அடிபணிந்து பொதுத்துறை நிறுவ னங்களை இந்திய ஆட்சியாளர்கள் சூறையாடுகின்றனர். ’புதிய தாராளமய பொருளாதார கொள்கை’ என்ற பெயரில் இந்திய ஆட்சியாளர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கின்றனர். தனியாரை ஊக்குவித்து, பொதுத்துறைகளை நஷ்டமாக்கி பின் தனியாரை கேந்திர பங்குதாரராக மாற்றி அவர்களுக்கு இந்த பொதுத் துறைகளை விற்கும் புதிய யுக்தியை கடைப்பிடிக்கின்றனர். இரண்டரை லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனம் 10,000 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு நஷ்டம் ஏற்படுவதற்கு அரசின் இந்த கொள்கைகள்தான் காரணம். அரசின் அனைத்து தொலை தொடர்பு கொள்கைகளும், என்டிபி 1995, என்டிபி 1999, என்டிபி 2005 மற்றும் என்டிபி 2012 ஆகிய அனைத்துமே தனியார் நிறுவனங்கள் கொழுக் கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடையுமே செய்துள்ளன. இப்படிப்பட்ட அரசின் கொள்கைகளை எதிர்த்து 1991 முதல் பிப்ரவரி 2013 வரை நடை பெற்ற அனைத்து 15 தேசிய பொது வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்ற பெருமை பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த காலங்களில் என்எப்டிஇ சங்கம் இது போன்ற போராட்டங்களில் ஒதுங்கி நிற்கும். தலமட்டங்களுக்கேற்ப முடிவு செய்யுங்கள் என்று என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை உபதேசம் செய்யும். தொடர்ந்து நாம் வேலை நிறுத்தங்களில் பங்கேற்றதால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக சமீபத்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை அறிவிப்பாவது வெளியிட்டது. மெல்ல பிஎஸ்என்எல் மடியும் என்று மனப்பால் குடித்த ஆட்சியாளர்களின் மனக்கோட்டை தகரும் வண்ணம், பிஎஸ்என்எல்-ஐ உயிரைக் கொடுத்தும் காத்திடுவோம் என ஊழியர்களையும், அதிகாரிகளையும், உடலை சிலிர்ப்பி, நெஞ்சுயர்த்தி நின்று போராட்ட களத்தில் போராடச்செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தான். இப்படிப்பட்ட வரலாறு ஏதாவது என்எப்டிஇ சங்கத்திற்கு உண்டா? இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில், ‘அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எதிர்க்க முடியாது’ என்பதே என்எப்டிஇ சங்கத்தின் கொள்கை முழக்கமாகும். உதாரணமாக தொலை தொடர்புத்துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். என் எப்டிஇ சங்கம் அரசின் இந்த முடிவுக்கு ஆதரவாக நின்று தொலை தொடர்புத் துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்று செப்டம்பர் 2000ல் வேலை நிறுத்தம் செய்தது.
கார்ப்பரேஷன் என்பது தனியார்மயத்தின் முதல்படி என்று ஊழியர்களிடம் விளக்கி கார்ப்பரேஷன் கூடாது என்று வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தியது பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தலைமை. ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாக என்எப்டிஇ சங்கம் செயல்பட்டதால் பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசால் எளிதாக உருவாக்க முடிந்தது. “பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஐம்பது சதவிகித பங்குகள் விற்கப்பட்டால், ஊழியர்களை மூன்று மாதம் ஊதியம் கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என கார்ப்பரேஷனாக மாற்றும்போது உடன்பாடு போட்டது அன்றைக்கு அங்கீகாரம் பெற்றிருந்த என்எப்டிஇ தலைமை. இதுஎன்எப்டிஇ-யால் மறைக்கவும் முடியாது. ஊழியர்களால் மன்னிக்கவும் முடியாது.