உலக வங்கியைப் போல ஆசிய நாடுகளுக்கான உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான வங்கி ஒன்றை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உட்பட 21 நாடுகள் இன்று கையெழுத்திட்டுள்ளன.சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று 21 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீனா அதிபர் ஜின்பிங் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.இதன் பின்னர் ஆசிய நாடுகளுக்கான உள்கட்டமைப்புக்கான முதலீட்டு வங்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தில் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.வங்கதேசம், புருனே, கம்போடியா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், குவைத், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியான்மர், நேபாளம், ஓமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திட்டன.போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை ஆசியாவின் பின்தங்கிய நாடுகளுக்கு இந்த வங்கி வழங்கும். ஆனால் இத்தகைய முயற்சிக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.இதனால் அமெரிக்காவின் நேச சக்திகளான தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
<நன்றி :- ஒன் இந்தியா >