Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts
Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts

Friday, November 14, 2014

எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஒரே இலக்கு.


காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... அதாவது பனை மர எண்ணெய்!எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரி, எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஒரே இலக்கு. அதற்காக எந்த நியாய தர்மங்களும் பார்க்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நியாயம் சொந்த நாட்டு இயற்கை வளங்களின் மேல் கைவைக்கக் கூடாது. மற்ற வளரும் நாடுகளின் வளங்களை இஷ்டத்துக்கு சூறையாடலாம். உலகம் முழுக்க இருக்கும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்க பாம் ஆயில் அவசியம். லிப்ஸ்டிக் போன்ற மேக்கப் பொருட்களில் நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பிளாஸ்டிக் சாஷேக்களில் வெளிப்புற வெப்பத்தைத் தாங்குவதற்கும், க்ரீம்களின் மென்மையான மேற்பரப்புக்காவும் பாம் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுக்க மக்களின் மேக்கப் மோகம் பல மடங்கு அதிகரிக்க, (அந்த மோகத்தைத் தூண்டுவதும் இதே பன்னாட்டு நிறுவனங்கள்தான்!) பாம் ஆயிலின் தேவை எக்கச்சக்கமாக அதிகரித்தது. 'தென்னையை வெச்சவன் தின்னுட்டு செத்தான்... பனையை வெச்சவன் பார்த்துட்டு செத்தான்’ என்பது, இரண்டு மரங்களும் வளர்வதற்கு ஆகும் காலத்தைச் சொல்லும் அட்டகாசப் பழமொழி. வளர்வதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் பனைமரம், கொடுப்பது என்னவோ கொஞ்சூண்டு எண்ணெய்தான். 'அது எப்போ ஆயில் தந்து... நாம எப்போ காசு பார்த்து’ என்கிற அவசரம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு. என்ன செய்வது என யோசித்தவர்கள் எடுத்த குரூரமான முடிவுதான், காடுகளை அழித்து பனைமரங்களை நடுவது. எங்கே காட்டை அழிப்பது? இந்தியா, ஜெர்மன் போன்ற இரண்டாம் நிலை நாடுகள் என்றால், எதிர்ப்பு இருக்கும். வறுமையும் கல்வியறிவும் குறைவான மூன்றாம் நிலை நாடுகள் என்றால் எந்த எதிர்ப்பும் இருக்காதே!இந்தோனேஷியா, மலேசியா, சுமத்ரா, தாய்லாந்து போன்ற குட்டி நாடுகளை இந்தப் பன்னாட்டு கம்பெனிகள் குறிவைத்தன. சிறு வயதில் புவியியல் வகுப்பில் டிராப்பிக்கல் ரெயின் ஃபாரஸ்ட்(Tropical rain forest) எனப் படித்திருப்போமே, இந்தத் தீவுகளில் அப்படிப்பட்ட காடுகள் நிறையவே உண்டு. இந்தக் காடுகளில் மழையும் அதிகமாக இருக்கும்; அதே அளவு வெயிலும் இருக்கும். வெப்பமும் குளிரும் கலந்திருப்பதால் நிறையப் புற்கள் முளைக்கும். எனவே மான்கள் இருக்கும். அதை வேட்டையாட புலிகள் இருக்கும். ஒவ்வொரு காட்டுக்கும் ஒரு ஸ்பெஷல் உயிரினம் இருப்பதைப்போல, இங்கே உராங்உட்டான் குரங்குகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் காட்டை அழித்தால் வளர்வதற்கு குறைவான காலம் எடுத்துக்கொள்ளும், அதே சமயம் அதிக எண்ணெய் தரும் பனைமரங்களை நடலாம். அப்புறம் என்ன? காசு, பணம், துட்டு, மணி, மணி! அரசாங்க அதிகாரிகளுடன் நேரடியாக டீல் போட்டு, 'உங்கள் நாட்டில் ஒரு பகுதி காட்டை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அதில் விதவிதமான மரங்களுக்குப் பதில் பனைமரங்கள் நடப்போகிறோம்’ என ஒப்புதல் வாங்கிவிட்டார்கள். எப்போ மரத்தை வெட்டி, எப்போ புது பனைமரங்கள் நட்டு, எப்போ காசு பார்ப்பது? அதனால் காடுகளை அழிக்க, சிம்பிளாக அவற்றுக்குத் தீவைத்துவிட்டார்கள். 
எந்தப் பக்கமும் போக முடியாமல் புலிகள், சுமத்ரன் நீர்யானைகள், ஆசிய யானைகள் போன்றவை தீயில் கருகி அலறிச் செத்தன. பறவைகள் கூச்சலோடு இடம்பெயர்ந்தன. இதுவரை 400 சுமத்ரன் புலிகளைக் காணவில்லை. இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. இது ஒருமுறை மட்டும் நடக்கவில்லை. ஒரு பகுதியை எரித்து, பனை நடவு முடிந்தவுடன் அடுத்த பகுதி. இப்போது இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கே கரும் புகையைக் கக்கியபடி, மரண ஓலத்துடன் காடு எரிந்துகொண்டிருக்கும்.உலகில் ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட எட்டு கால்பந்து மைதானங்கள் அளவுக்கான காடுகள், தினமும் அழிக்கப்பட்டுவருகின்றன என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு கவலையோடு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எரிக்கப்படும் காடுகளால் உராங்உட்டான் குரங்குகளின் எண்ணிக்கை சரசரவென சரிபாதியாகக் குறைந்துவிட்டது. 'உராங்உட்டான்’ என்றால் காடுகளின் மனிதன் என அர்த்தம். ஏனென்றால், இதன் 97 சதவிகித செயல்பாடுகள் அப்படியே மனிதனைப்போலவே இருக்கும். பாலூட்டுவதில் இருந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வது வரை அப்படியே மனிதனைப்போலவே வாழும். குரங்கு வகையிலேயே அதிக புத்திசாலி. International union for the conservation of Nature and natural resources என்ற சுற்றுச்சூழல் அமைப்பினர் ஒவ்வொரு வருடமும் 'ரெட் புக்’ என்ற பட்டியலை வெளியிடுகின்றனர். அதில் '55 ஆயிரம் போர்னியோ உராங்உட்டான் உள்ளன. காடுகளில் தீ வைப்பதால் வருடத்துக்கு 2,000 குரங்குகள் அழிந்துவிடுகின்றன. சுமத்ரன் தீவு உராங்உட்டான் மொத்தமே 6,300-தான் இருக்கின்றன. அது வருடத்துக்கு 1,000 என்ற அளவில் அழிந்துவருகின்றன. இதே வேகத்தில் போனால், இன்னும் 10 ஆண்டுகளில் உரான்உட்டான் குரங்குகளே இருக்காது’ என்கிறது. காடுகள்தானே அழிகின்றன என அலட்சியமாக இருந்துவிட முடியாது. இப்படி வருடம் முழுவதும் எரிக்கப்படும் காடுகளால் 35 மில்லியன் டன் கார்பன் வெளியாகி, கடந்த 10 ஆண்டுகளில் குளோபல் வார்மிங் 20 சதவிகிதம் வரை உயர்ந்துவிட்டது. இப்படி ஓர் அழிப்பு வேலை வெளியே தெரியவந்து அதிர்ச்சி அலை ஏற்படுத்த, பல தன்னார்வ நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்துப் போராட ஆரம்பித்திருக்கின்றன.
அதுபோன்ற ஓர் அமைப்புதான் Roundtable on Sustainable Palm Oil (RSPO). 'இன்றைய தினசரி வாழ்க்கையில் இருந்து பாம் ஆயில் பயன்பாடுகொண்ட பொருட்களை நீக்குவது என்பது ரொம்பவே கஷ்டம். மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் பாம் ஆயிலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம், காடுகளை அழித்தே எடுக்கப்படுகிறது. இதில் மக்களைக் குறைசொல்வதில் அர்த்தம் இல்லை. 'காடுகளை அழித்து பனைமரங்களை நடுவதற்குப் பதிலாக, இயல்பாக பனை மரங்கள் வளர்க்க முடிந்த இடங்களில் வளர்த்து அதைப் பயன்படுத்துங்கள்’ என, பன்னாட்டு நிறுவனங்களை வலியுறுத்துகிறோம். இதில் மக்கள் தங்கள் பங்காக கடையில் வாங்கும் பொருட்களில் எங்கள் முத்திரையான Certified Sustainable Palm Oil(CSPO) அல்லது green palm முத்திரை இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள். அப்படி நாங்கள் முத்திரை கொடுத்திருக்கும் பொருட்கள், காடுகளை அழிக்காமல் பாம் ஆயில் எடுத்துப் பயன்படுத்தியது என அர்த்தம். அப்படி எந்த முத்திரையும் இல்லையென்றால், அதன் தயாரிப்பாளரிடம் நீங்கள் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. காடுகளை அழிக்காமல் நல்ல முறையில் உருவாக்கப்படும் பாம் ஆயிலினால் தயாரிக்கப்படும் பொருட்களின் பட்டியல், இணையதளத்திலும் கிடைக்கிறது. நமது பங்காக அதை வாங்க ஆரம்பித்தாலே மற்ற கம்பெனிகள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்’ என்கிறார்கள்.அடுத்த முறை லிப்ஸ்டிக் பூசும்போது லேசாகச் சுவைத்துப் பாருங்கள். உராங்உட்டான் குரங்கின் ரத்தப் பிசுபிசுப்பை உணரலாம்!
                         நன்றி :- விகடன் 

Friday, October 31, 2014

சர்தார் படேல் இஸ்லாமியருக்கு எதிரியா?


1949-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சர்தார் படேல் தெளிவாகச் சொன்னார்: “இந்து நாடு என்பது ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை. இந்தியர்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அந்த எண்ணமே இந்தியாவின் ஆன்மாவை அழித்துவிடும்.”
தி ஹிந்து செய்தி படிக்க :-Click Here

Saturday, October 25, 2014

ஏன் இந்த தனியார் மோகம்?

         நிலக்கரித் துறையில் சமீப காலமாக நிலவிவந்த அசாதாரணச் சூழலில், பல்வேறு விமர்சனங்களுக்கிடையில், மத்திய அரசு துரித நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக 214 நிலக்கரி உரிமங்களை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிலக்கரித் துறையே ஸ்தம்பித்துப்போயிருந்த நிலையில் மத்திய அரசு சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், யாருக்காக இந்தச் சுறுசுறுப்பு என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.ரத்துசெய்யப்பட்ட ஒதுக்கீடுகளெல்லாம் இணையத்தின் மூலம் ஏலம் விடப்படவிருக்கின்றன. ஏலத்துக்குப் பின், பழைய உரிமையாளர்களிட மிருந்து புதிய உரிமையாளர்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதற்கேற்ப அவசரச் சட்டமொன்றும் அமல்படுத்தப் படவிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப் பதற்காகத்தான் எல்லா ஏற்பாடுகளும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், “இந்தியாவின் நிலக்கரித்துறையின் நலன்கள் பாதுகாக்கப்படும்” என்று அருண் ஜேட்லி சொல்லியிருப்பதுதான் இதில் வேடிக்கை. தனியாரின் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்று நிதியமைச்சர் நம்புகிறார் போலும். எனினும், தேவையானபோது தனது அதிகாரத்தை அரசு பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அவசரச் சட்டத்தில் இடம் இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.உலகில் அதிக அளவு நிலக்கரி வளத்தை பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: சுமார் 30,100 கோடி டன்கள். அப்படி இருந்தும், சென்ற ஆண்டும் மட்டும் 17.4 கோடி டன்கள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய். இந்தியாவில் இவ்வளவு நிலக்கரி வளத்தை வைத்துக்கொண்டு இறக்குமதி செய்வதற்குக் காரணம் நிலக்கரித் துறையின்மீது அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு இருக்கும் மேலாதிக்கம்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்குப் போதுமான சுதந்திரத்தையும், அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிப்பதன் மூலம் இந்திய நிலக்கரித் துறைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட கதிதான் நிலக்கரித் துறைக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. இதன் உள்ளார்ந்த நோக்கமே அரசுத் துறையால் எதையும் செய்ய முடியாது, தனியார் துறையே திறம்படச் செயலாற்றும் என்று நம்பவைப்பதுதான். தகவல்தொடர்புத் துறையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உலகத்திலேயே இல்லாத வகையில் பிரம்மாண்டமான தகவல்தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டது இந்தியா. ஆனால், களத்தில் தனியார் துறைக்கு வழிவிட்டு வேண்டுமென்றே பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது அரசுத் துறை. நிலக்கரித் துறையும் இன்று இந்த இடத்தை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.ஒருபுறம், அரசுத் துறை சரியாகச் செயல்படவில்லை என்றால், மறுபுறம் தனியார் நிறுவனங்கள் அதீதமாகச் செயல்பட்டு லாப வேட்டையை நிகழ்த்துகின்றன. அதற்கு வழி விடவே அரசுத் துறை நிறுவனங்கள் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யப்படுகின்றன. அரசு மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொள்ள முடியும். ஆனால், அரசு மந்தமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தனியாருடைய ஒரே நோக்கம் லாபம் என்பதால் தனியார்மயமாக்குவதில் முதல் பலி மக்கள் நலன்தான். இந்த உண்மை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டும் அரசு சளைக்காமல் தனியாரை நோக்கியே நகர்வது எதற்காக?
                                 <நன்றி :- தி ஹிந்து >

முதலாளிகள் நலத் துறை!

          தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று கருதும் பிரதமர் நரேந்திர மோடி, ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய உழைப்பே வெல்லும்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார்.ஏனைய அரசியல் கட்சிகள், மத்திய தொழிற்சங்கங்கள் யாரையும் ஆலோசனை கலந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.புதிய நடைமுறையின்படி தொழில் நிறுவனங்களே தங்களுடைய ஆலையில் உள்ள தொழிலாளர்கள் நிலைமை குறித்து, எளிமைப் படுத்தப்பட்ட விண்ணப்பங்களில் தகவல்களை நிரப்பி, தாங்களே ஆய்வுசெய்து அந்த அறிக்கையை உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கலாம். அதேசமயம், தொழிற்சாலை ஆய்வாளர்கள் இனி எந்த ஆலைக்கு ஆய்வுக்குச் செல்வதாக இருந்தாலும் அதை எழுத்துபூர்வமாக முன்கூட்டியே தங்கள் அலுவலகங்களில் பதிவுசெய்ய வேண்டும். ஆலையில் ஆய்வுகளை முடித்த பிறகு, ஆய்வறிக்கையை 72 மணி நேரத்துக்குள் கணினியில் பதிவுசெய்துவிட வேண்டும். அதன் பிறகு அதில் மாறுதல்கள் எதையும் செய்ய முடியாது. அந்தப் பதிவை அந்தத் துறையின் அதிகாரிகள், ஆலையின் நிர்வாகம், தொழிலாளர்கள் தரப்பு என்று அனைவரும் பார்க்க முடியும். அரசின் இந்த முடிவைத் தொழில் துறையும் முதலாளிகளும் வரவேற்கின்றனர்; தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றனர்.ஆய்வாளர் பணி என்பதன் இலக்கணம் என்ன? ஒரு அமைப்பில் விதிகளுக்கு உட்பட்டு எல்லோரும் இயங்குகின்றனரா என்று எப்போது வேண்டுமானாலும், பரிசோதித்துப் பார்ப்பதுதானே? இந்திய அமைப்பில் தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு விதிகளை மதிக்கின்றன; இங்கே ஆய்வுகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதையெல்லாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முப்பதாண்டுகள் ஆகும் நிலையிலும், போபால் விஷவாயுக் கசிவின் அழிவுகள் இன்னும் மறக்கவிடாமல் துரத்துகிறதே... எல்லா விதிகளையும் வளைக்கும் தொழில் துறையின் பண அரசியல்தானே போபால் அழிவுக்குக் காரணம்? ஏற்கெனவே ஊழல் புற்றாகப் பரவிக் கிடக்கும் அதிகார அமைப்பில், சீர்திருத்தம் என்ற பெயரில் இன்னும் நூறு ஓட்டைகளைப் போட்டால் என்னவாகும்?ஒரு தொழில்சாலையை நடத்த தொழிலதிபர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நிலம், மின்சாரம், தண்ணீர், மூலதனக் கடன் என எதையெல்லாம் சலுகையில் பெற முடியுமோ, அதையெல்லாம் சலுகையில் பெறுகின்றனர்; புதிய நிறுவனங்களாக இருந்தால் முதலீட்டு மானியமும் பெறுகின்றனர்; முன்னுரிமை பெற்ற ஏற்றுமதித் துறையாக இருந்தால் ஏற்றுமதி மானியமும் பெறுகின்றனர். நாடு வாரிக் கொடுக்கிறது. ஆனால், தொழில் அதிபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இப்படியெல்லாம் காட்டப்படும் சலுகையிலும், பரிவிலும் நூறில் ஒரு பங்குகூடத் தொழிலாளர்களுக்குக் காட்டப்படுவதில்லை. அவர்கள் வசம் மிச்சசொச்சம் இருக்கும் உரிமைகளையும் பறிக்க அரசே துணை போகும் என்றால், தொழிலாளர் நலத் துறையின் பெயரை முதலாளிகள் நலத் துறை என்று மாற்றிவிட்டு பகிரங்கமாக அதைச் செய்யட்டும்!
                       <நன்றி :- தி ஹிந்து >

Wednesday, March 19, 2014

தொடரும் கொடுமைகள்

          ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வந்த கே.பி.ஆர்.மில்லில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் இறங்கி, மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர 9 பேர் ஆபத்தான முறையில் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

          
இச்சம்பவம் தொடர்பாக அத்தொழிற்சாலையின் தனி அலுவலர் ரமணன், ஆலை மேலாளர் ரங்கராஜன் மற்றும் சுத்திகரிப்பு நிலைய மேலாளர் நாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
          
சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


விஷவாயுவால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்கள்….

          
பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. விஷவாயு தாக்கி கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட இறப்புகளின் விபரம் :
          
தூத்துக்குடியில், கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர்.
          
அதற்கு அடுத்த மாதமான ஏப்ரலில் சென்னை பெரும்பாக்கத்தில் கழிவறைத்தொட்டியை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்.
          
இதே மாதத்தில், ஆயிரம் விளக்கு பகுதியில் உணவகம் ஒன்றின் 40 அடி கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர் பலியானார்.
          
2013, ஏப்ரல் 27ஆம் தேதி, திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சலையில் பாதாள சாக்கடை திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் இருவர் உட்பட 3 பேர் விஷவாயு தாக்கி மரணமடைந்தனர்.
          
கடந்தாண்டு மே மாதம் 28 ஆம் தேதி தஞ்சாவூரில் வடக்கு வாசல் பகுதியில் ஆழ்துளைகிணறு உள்ளே இறங்கிய 2 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தனர்.

          
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், கழிவு நீர் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் துப்புரவு தொழிலாளர்கள் 10 பேர் மரணமடைந்தனர்.
          
இதே ஆண்டு செப்டம்பர், 7 ஆம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது திருக்கழுகுன்றம் வடிகால் வாரியத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
          
செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி புழல் அருகே வீட்டு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
          
2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவேங்கடபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட 2தொழிலாளர்கள் விஷவாயு தாக்குதலுக்கு பலியாகினர்.
          
நவம்பர் 7ஆம் தேதி சென்னை அம்பத்தூர் பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்பு பணியின் போது விஷவாயு தாக்கியதில் ஆந்திராவை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
          
இந்த ஆண்டு (2014) பிப்ரவரி 16ஆம் தேதி திருவொற்றியூரில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் உயிரிழந்தார்.

          
பாதுகாப்பற்ற முறையில் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கியதால், விஷவாயு தாக்கியதில் 21 ஆம் நூற்றாண்டு தொடங்கியது முதல், கடந்த 15 ஆண்டுகளில் 800 பேர் உயிரிழந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

தரவுகள் : Puthiyathalaimurai TV

The Hindu

New Indian Express










          
போதும் இந்தத் தொல்லை என பொங்கி வரும் கூட்டம், நிலை மாறும் வழி காணும் வகை செய்திட வேண்டும். நாம் நமது ஜனநாயகக் கடமையாற்ற உள்ள நேரத்தில் அடித்தள, பாட்டாளி மக்களுக்கான சிந்தனைகளை உள்வாங்கிச் செயல்படுவோம். நமக்காகத் திட்டமிட வேண்டும். அதை நாம்தான் திட்டமிட வேண்டும்.

Tuesday, March 18, 2014

என்.எல்.சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

          நெய்வேலி என்.எல்.சி.யில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மனைவிக்கு நிரந்திர பணி வழங்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி : http://www.puthiyathalaimurai.tv
          பொருளாதார பலன்களைக் காட்டி தற்போதைய போராட்டத்தை வேண்டுமானால் நிறுத்திவிடலாம். ஆனால் அது பிரச்சனைக்கான தீர்வாக முடியாது. இனி இதுபோல் நடக்காமல் இருப்பதற்கான முயற்சியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கவனம் செலுத்துவதுடன் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

Wednesday, March 12, 2014

இப்போதே ஆரம்பிச்சு…

ஆண்டிபட்டி-தேனி தேசிய நெடுஞ் சாலையில், சக்கம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு முன்னர் நான்கு வாகனங்கள் நின்றது மக்கள் கூட்டம்.ஏதோ விபத்து ஏற்பட்டு விட்டதா என்று பார்வையிட சென்றபோது,சுமார் 40 வயது மதிக்கதக்க நபர் படுத்து கிடந்தார்.
ஏதோ வாகனத்தில் அடிபட்டு விட்டார் என்று நினைக்கும் போது,அருகில் இருந்தவர் 108 ஆம்புலன்ஸ் போன் போடுங்கள் என்றார்.அப்போது எனது கைபேசியை எடுத்து 108 நம்பருக்கு போன் போடும் போது கால் சென்டர் இனைப்பு கிடைத்தது. விபரம் கூறும் போது,அருகில் இருந்தவர்கள் தண்ணி அடித்து விட்டு படுத்து இருக்கிறான் என்றார்கள்.உடனே நான் கால் சென்டர் பெண்ணிடம் மன்னித்து விடுங்கள் தவறுதலாக போன் பண்ணிவிட்டேன் என்று கூறி இனைப்பை துண்டித்து விட்டேன்.
அதன்பிறகு அருகில் இருந்தவர்களிடம் ஏம்பா மெயின்ரோட்டில் விழுந்து கிடக்கிறானே தூக்கி அருகில் படுக்க வைக்கலாமே என்றேன். அதற்கு அவர்கள் இவன் தண்ணியும்,கஞ்சாவும் சேர்ந்து போட்ட மப்புல இருக்கான் பாரு என்றார்கள்.அருகில் காவல் நிலைய பெண்மணி பைக்கில் வந்தார். என்ன என்று கேட்டார் தண்ணி அடிச்ச மப்புல மறியல்ல இருக்கான் என்று ஒருவர் கூறியவுடன் அந்த காவல் பெண்மணியும் அதே வேகத்தில் சென்றார்.
அதன் பின்பும் அருகில் இருந்தவர்களிடம் வப்பா தூக்கி ஒரத்தில் படுக்க வைக்கலாம் என்று கூறியபோது யாரும் வரவில்லை.அவன் போதை தெளிச்ச உடனே போய் விடுவான் என்றார்கள்.உடனே நான் ஏலே கம்பு எடுடா,
ரெண்டு வெழுத்து வெழுத்தலாம் என்றேன், பார்க்கலாம் - உடனே கண்ணை திறந்தான், அடுத்து நைசா எழுந்து ஒரத்திலே போய் படுத்துக் கொண்டான்.
அப்போது தான் எங்க ஆத்தா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது ஆடுற மாட்டை ஆடி கறக்கனும்,பாடுற மாட்டை பாடி கறக்கனும் என்பது.

குறிப்பாக அவன் படுத்து இருக்கும் சாலை தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, அதிலும் அதிக அளவில் வாகனம் செல்லும் சாலை இதில் ஒருவன் படுத்து இருக்கான் அவனை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் வேதனை.
இப்படியானவர்கள் அட்டுழியம் என்றைக்குத்தான் ஒழியுமோ தெரியவில்லை. இனி தேர்தல் நேரத்தில் என்னவெல்லாம் இவங்களால நடக்கப்போகுதோ தெரியவில்லை.
தேர்தல் கமிஷன் கவனத்திற்கு
பிளாஸ்டிக் தடைசெஞ்சாங்க, விளம்பரத்தை தடைசெஞ்சங்க, எதை, ஏதையோ தடைசெஞ்சாங்க, தேர்தல் நேரத்தில் இந்த டாஸ்மாக் கடையை தடைவிதித்த நீங்க நல்லா இருப்பீங்க.
- ஆண்டிப்பட்டி பாண்டி

Sunday, February 23, 2014

மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்!

மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்! எக்னாமிக் டைம்ஸ் அம்பலப்படுத்துகிறது.

           மக்கள் மத்தியில் போலி யான மலிவுப் பிரச்சாரத் தைச் செய்வது எப்படி என்பதற்கு மோடியின் பின் னால் உள்ள நிபுணர்கள் குழுவை ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.
தேர்தல் காலம் நெருங்க நெருங்க பாஜக-வினால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி எந்த எந்த வகையில் புதிய புதிய அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்ற முடியும் என அனைத்துத் துறை நிபுணர்களிடமும் ஆலோசனை கேட்டு வரு கிறார்.தேர்தலை மய்யமாக கொண்டு மூன்று நிலையில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

அது
1. மக்களை ஏமாற்றும் புதிய திட்டங்கள்,

2. அதை மய்யமாக வைத்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவது,

3. அவற்றை அப்படியே ஊடகங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது;

இதுதான் மோடியின் தேர்தல் மோசடித் திட்டம்.மோடியின் இந்த மோசடித்திட்டத்திற்கு வலுவூட்ட பல நிபுணர்கள் கொண்டகுழு உள்ளது. இக்குழுவில் பொருளாதார நிபுணர் கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியர் அரவிந்த பங்கரியா, பிரபல பங்குவர்த்தக முதலீட்டு ஆலோசகர் குரு ரவி மந்தா, கொள்கை ஆய்வு மய்யக் குழுவில் உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் திபோராய், மனீஷ் சபர்வால் போன் றோர் உள்ளனர்.
          இந்தக்குழுவின் தலை வர் போல் செயல்படும் ஜகதீஷ் பகவதி, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மீது மதிப்பு கொண் டவர். ஆனாலும், அவரது சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்டவர். இதில் பங்கரியா பாது காப்பு மற்றும் அயலுறவுத் துறை விவாகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராம். இந்தக்குழு தொடர்ந்து இந்தியப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மோடிக்கு ஆலோசனை அளித்து வருகிறது. இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஒருவர் இந்தக் குழுவின் ஆலோச னையின் பேரில் நரேந்திர மோடியின் உரைகள் தயா ரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் மோடியின் தேர்தல் களத் தின் பின் புலத்தில் உள்ளனர்.இந்தக் குழு தற்போது நாடு எதிர்நோக்கி இருக்கும் முக்கிய பிரச்சினை யான மின்சாரத்தை முதன் மையாக எடுத்துள்ளது.24 மணி நேரம் மின்சாரம் என்பது சாமானியர்களின் கனவாகும். இதை மனதில் கொண்டு மின்சாரம் மற்றும் இந்த பிரச்சினையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது, இதன் மூலம் தன்னை பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடப் போகும் ஒருவராக காட்டிக் கொள்ள நரேந்திர மோடிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். நிறைவேற்ற இயலாதவை! மேலும் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை கூறுவது மோடியின் வளர்ச்சி பற்றிய பேச்சுக்களின் பின் புலத்தில் பொருளாதார, தொழில்வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மிகப் பெரிய ஆலோசனைக்குழுவின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இவர்களின் ஆலோ சனைப்படியே நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த உரையை அனைத்து மேடை களிலும் பேசி வருகிறார்.

          பொருளாதார நலிவில் சிக்கியுள்ளதாக மாயையை முதலில் தனது பேச்சால் உருவாக்கி, அதன் பிறகு அதற்கான திட்டங்கள் இவை என்று மக்களிடம் கூறி வாக்காளர்களை கவர்ந்து (ஏமாற்றி) வருகிறார். உண்மையில் மோடிக்கு பின்புலத்தில் நிற்கும் நிபுணர்களின் ஆலோசனைகள் பெரும்பாலானவை நிறைவேற்ற இயலாதவையாகவே உள்ளன.

(நன்றி:எக்னாமிக்டைம்ஸ் நாள்:19.2.2014)

Wednesday, October 2, 2013

"என்னது... சிவாஜி செத்துட்டாரா?"

(த இந்து தமிழ் நாளிதழில் வெளியான சமஸ் அவர்களின் செய்தி விமர்சனம்)



           முதல்முறை அந்தச் செய்தியைப் படித்தபோது பிரதமரே கொஞ்சம் திடுக்கிட்டுப்போய் இருப்பார். மோடி கொடுத்த பேட்டியைத்தான் ராகுல் பெயரில் ஊடகங்கள் தவறாகப் போட்டுவிட்டனவோ என்று. "அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்" - என்ன ஒரு காட்டம்?!

          கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் முக்கியமான அம்சத்தை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியை உடனடியாகப் பறிக்க வகைசெய்யும் உத்தரவு இது.

          மேலும், சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும் இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்கிறது. இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே துரிதமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது மன்மோகன் சிங் அரசு. தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தத் தீர்ப்பைச் செயலிழக்கச் செய்யும் சட்ட மசோதாவை உருவாக்கி, மழைக்காலக் கூட்டத் தொடரின்போது, நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. அந்தக் குழுவின் ஆய்வு நிலுவையில் இருக்கும்போதே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

          இந்தச் சட்டத் திருத்தத்தை செப்டம்பர் 6-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், "சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம். சில நேரங்களில் நீதிமன்றங்கள் தவறு செய்கின்றன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் செய்த தவறை நாம் சரிசெய்கிறோம்" என்றார். அமெரிக்கா செல்லும் முன் செப்டம்பர் 24-ம் தேதி அவசரமாக அமைச்சரவையைக் கூட்டிய பிரதமர் மன்மோகன் சிங் இந்த அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றார்.

          இடதுசாரிகளும் பா.ஜ.க-வும் இந்த அவசரச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், "மசோதா மீதான நிலைக் குழுவின் ஆய்வு நிலுவையில் உள்ளபோதே, இப்படி ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது சட்ட விரோதம்" என்ற முறையீட்டோடு, குடியரசுத் தலைவரை செப்டம்பர் 26-ம் தேதி சந்தித்தது பா.ஜ.க. இதைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் பிரணாப் முகர்ஜி விளக்கம் கேட்ட நிலையில்தான் செப்டம்பர் 27 அன்று இப்படிப் பொங்கி எழுந்திருக்கிறார் ராகுல்.


          ஜூலை 10-க்கும் செப்டம்பர் 27-க்கும் இடைப்பட்ட 78 நாட்களில் ராகுல் எங்கே இருந்தார்? என்னவானார்? இந்தச் சட்டத் திருத்தத்தில் மன்மோகன் சிங் இவ்வளவு அவசரம் காட்டக் காரணமும் தன் சொந்தக் கட்சிக்காரரின் விவகாரம்தான்.

          மருத்துவக் கல்விக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் முறைகேட்டில் ஈடுபட்டதை செப்டம்பர் 19-ம் தேதி உறுதிசெய்தது சி.பி.ஐ. நீதிமன்றம். அக்டோபர் 1-ம் தேதி அவருக்குத் தண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டால், இந்திய அரசியல் வரலாற்றில் முறைகேட்டில் சிக்கியதற்காகப் பதவியை இழந்த முதல் அரசியல்வாதி என்று காங்கிரஸின் ரஷீத் மசூதின் பெயர் இடம்பெறும். அதைத் தவிர்க்கத்தான் இவ்வளவு துடிப்போடு செயல்பட்டது சிங் அரசு.

          ராகுலுக்கு இது தெரியாதா? பெரிய வேடிக்கை, "அரசியல் சமரசத்துக்காகவே இதுபோன்ற அவசரச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் நாட்டில் உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டுமானால், இத்தகைய சின்னஞ்சிறு சமரசங்களை நாம் செய்துகொள்ளக் கூடாது" என்று தன்னுடைய எதிர்ப்புக்கு ஊழலைக் காரணமாக ராகுல் சொல்லியிருப்பது.

          ஊழலைப் பற்றிப் பேச காங்கிரஸுக்கோ, இந்த அரசுக்கோ, ராகுலுக்கோ தார்மிகரீதியாக என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள், "அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் கொடுத்தார்கள்" என்ற குற்றச்சாட்டோடு, கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிய காட்சியில் தொடங்கி, "ராணுவக் கொள்முதலில் நடக்கும் ஊழலுக்கு ஒத்துழைக்க எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்" என்று நாட்டின் தரைப் படைத் தளபதியே பேட்டி கொடுத்தது வரை நடந்தது மன்மோகன் சிங் ஆட்சியில்தானே?

          பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதானே 'இஸ்ரோ' ரூ.4.5 லட்சம் கோடி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டுக்கும் நிலக்கரித் துறை ரூ.10 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாயின? நாடே அதிர்ந்த ரூ.1.76 லட்சம் கோடி முறைகேட்டில் சிக்கிய ஆ.ராசா சில நாட்களுக்கு முன்கூடக் கேட்டிருக்கிறார்: "2007-08-ல் '2ஜி'அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருந்தால், ஏன் 2009-ல் திரும்பவும் எனக்கே பிரதமர் தொலைத்தொடர்புத் துறையை ஒதுக்கினார்?" என்று. பதில் அளிக்க ஆள் இல்லை.
          ஒருகாலத்தில், "குடும்பத்துக்காகச் சம்பாதிப்பதுதான் என்னுடைய பெரிய சவால். நான் என்னுடைய கைவினைப் பொருட்களை வாங்குபவர்களைத் தேடி வீடுவீடாகச் செல்கிறேன். பல இடங்களில் என்னை வெளியே தள்ளியிருக்கிறார்கள். தளராமல் போராடுகிறேன்" என்று பேட்டியளித்த ராபர்ட் வதேரா, ஓராண்டுக்குள் ஆறு நிறுவனங்கள் தொடங்கும் அளவுக்கு வளர்ந்ததும் 12 நிறுவனங்களுக்கு இயக்குநரானதும் இந்த ஆட்சியில்தானே? ரூ.300 கோடி அளவுக்கு ராபர்ட் வதேரா மீது முறைகேடு குற்றச்சாட்டு வந்தபோது இதே பிரதமர் இந்தச் சங்கதிகள் எல்லாம் வெளியே வரக் காரணமாக இருக்கும் தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காகப் பகிரங்கமாகப் புலம்பினாரே... நினைவிருக்கிறதா?           அட, ராகுல் இப்படிப் பொங்குவதற்கு முதல் நாள், அவருடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான தொழிலதிபர் நவீன் ஜிண்டாலை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது... அரசுக்குப் பொய்யான தவலை அளித்து, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்ற வழக்கில். ராகுல் எங்கே இருந்தார்? என்னவானார்? ராகுலின் திடீர் ஆவேசம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் புகழ்பெற்ற வசனத்தை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறது. அந்தப் படத்தில் குறுகிய கால மறதி நோயால் பாதிக்கப்பட்டு நினைவு திரும்பும் காட்சியில் விஜய் சேதுபதி கேட்பார்: "என்னது... சிவாஜி செத்துட்டாரா?"
நன்றி : த இந்து (தமிழ்)
தொடர்புக்கு: writersamas@gmail.com
(படங்கள் ‘த இந்து’வில் இருந்து எடுக்கப்பட்டவை இல்லை.)

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...