நிலக்கரித் துறையில் சமீப காலமாக நிலவிவந்த அசாதாரணச் சூழலில், பல்வேறு விமர்சனங்களுக்கிடையில், மத்திய அரசு துரித நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக 214 நிலக்கரி உரிமங்களை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிலக்கரித் துறையே ஸ்தம்பித்துப்போயிருந்த நிலையில் மத்திய அரசு சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், யாருக்காக இந்தச் சுறுசுறுப்பு என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.ரத்துசெய்யப்பட்ட ஒதுக்கீடுகளெல்லாம் இணையத்தின் மூலம் ஏலம் விடப்படவிருக்கின்றன. ஏலத்துக்குப் பின், பழைய உரிமையாளர்களிட மிருந்து புதிய உரிமையாளர்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதற்கேற்ப அவசரச் சட்டமொன்றும் அமல்படுத்தப் படவிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப் பதற்காகத்தான் எல்லா ஏற்பாடுகளும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், “இந்தியாவின் நிலக்கரித்துறையின் நலன்கள் பாதுகாக்கப்படும்” என்று அருண் ஜேட்லி சொல்லியிருப்பதுதான் இதில் வேடிக்கை. தனியாரின் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்று நிதியமைச்சர் நம்புகிறார் போலும். எனினும், தேவையானபோது தனது அதிகாரத்தை அரசு பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அவசரச் சட்டத்தில் இடம் இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.உலகில் அதிக அளவு நிலக்கரி வளத்தை பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: சுமார் 30,100 கோடி டன்கள். அப்படி இருந்தும், சென்ற ஆண்டும் மட்டும் 17.4 கோடி டன்கள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய். இந்தியாவில் இவ்வளவு நிலக்கரி வளத்தை வைத்துக்கொண்டு இறக்குமதி செய்வதற்குக் காரணம் நிலக்கரித் துறையின்மீது அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு இருக்கும் மேலாதிக்கம்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்குப் போதுமான சுதந்திரத்தையும், அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிப்பதன் மூலம் இந்திய நிலக்கரித் துறைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட கதிதான் நிலக்கரித் துறைக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. இதன் உள்ளார்ந்த நோக்கமே அரசுத் துறையால் எதையும் செய்ய முடியாது, தனியார் துறையே திறம்படச் செயலாற்றும் என்று நம்பவைப்பதுதான். தகவல்தொடர்புத் துறையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உலகத்திலேயே இல்லாத வகையில் பிரம்மாண்டமான தகவல்தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டது இந்தியா. ஆனால், களத்தில் தனியார் துறைக்கு வழிவிட்டு வேண்டுமென்றே பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது அரசுத் துறை. நிலக்கரித் துறையும் இன்று இந்த இடத்தை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.ஒருபுறம், அரசுத் துறை சரியாகச் செயல்படவில்லை என்றால், மறுபுறம் தனியார் நிறுவனங்கள் அதீதமாகச் செயல்பட்டு லாப வேட்டையை நிகழ்த்துகின்றன. அதற்கு வழி விடவே அரசுத் துறை நிறுவனங்கள் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யப்படுகின்றன. அரசு மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொள்ள முடியும். ஆனால், அரசு மந்தமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தனியாருடைய ஒரே நோக்கம் லாபம் என்பதால் தனியார்மயமாக்குவதில் முதல் பலி மக்கள் நலன்தான். இந்த உண்மை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டும் அரசு சளைக்காமல் தனியாரை நோக்கியே நகர்வது எதற்காக?
<நன்றி :- தி ஹிந்து >
No comments:
Post a Comment