மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகின்றன.இதுவரை 12.36 சதவிகிதமாக இருந்த சேவை வரி இனி 14 சதவிகிதமாக உயர்கிறது.இதனால் மக்கள் எந்தெந்த சேவைகளுக்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை பார்க்கலாம்.
மொபைல் போன்களுக்கு உயர்வு:
மக்களின் அத்தியாவசிய சேவையாக மாறிவிட்ட மொபைல் ஃபோன்களுக்கு சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இணையதள சேவை அதாவது டேட்டா சேவைகளுக்கும் இந்த சேவை வரி உயர்வு பொருந்தும்.
அதிகரிக்கும் விமான, ரயில் கட்டணங்கள்:
விமான பயணத்திற்கும் குளிர்சாதன வகுப்பு மற்றும் முதல் வகுப்பு ரயில் பயணத்துக்கும் கட்டணம் உயர உள்ளது. இது தவிர ரயில் மற்றும் லாரிகளில் எடுத்து செல்லப்படும் பொருட்கள் அனைத்துக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் மட்டும் விதிவிலக்கு:
அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு மட்டும் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட உயர்தர உணவகங்களுக்கு சென்று உண்பவர்களும் இனி கூடுதல் தொகையை செலவிட வேண்டும் .
வங்கிச் சேவைகளுக்கும் கூட:
வங்கிகளிடம் இருந்து அதன் வாடிக்கையாளர்கள் பெறும் பல்வேறு வகையான சேவைகளுக்கும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவித்து உள்ளன .
அழகு சாதன நிலையங்கள்:
இதுதவிர dth சேவை பெறுபவர்கள், அழகு சாதன நிலையங்களுக்கு செல்பவர்கள், கொரியர் சேவை, லாண்டரி சேவை உள்ளிட்டவற்றுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கும் ஆப்பு:
ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கும் பொருட்களுக்கும் சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளும் சேவை வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் புதிய வீடுகளுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக தர வேண்டியிருக்கும்.
பலமான வரி வலை:
500 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டியிருக்கும் இசை, நடனம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் புதிதாக சேவை வரி வலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் தீம் பார்க்குகள் உள்ளிட்டவற்றுக்கும் சேவை வரி கட்ட வேண்டியிருக்கும். மேலும் சிட் ஃபண்டுகள், காப்பீடு, பிரிமியம் உள்ளிட்ட நிதிச் சேவைகளுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
என்னவோ போங்கப்பா:
அப்போ எந்த அத்தியாவசிய சேவைக்குதான் கட்டண உயர்வு இல்லை என்று கேட்டீர்கள் என்றால் கட்டணக் கழிப்பிடங்களுக்கு மட்டும் உயரவில்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல்!
நன்றி : ஒன் இந்தியா
No comments:
Post a Comment