புதிய நிதிச் சட்டம் 2015-ல் 192ஏ என்ற பிரிவை மத்திய அரசு இப்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இதில் பான் எண் கொடுத்தவர்களுக்கு 10 சதவிகிதம் டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும். அதுவே படிவம் 15ஜி, 15ஹெச் சமர்பித்தவர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதிகபட்சமாக டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். இந்த விதிமுறை யாருக்கு பொருந்தும், யாருக்குப் பொருந்தாது என்பது குறித்து பிஎஃப் அமைப்பின் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத்திடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.
எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது?
"ஒரு பிஎஃப் கணக்கிலிருந்து இன்னொரு பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. அதாவது, ஒரே ஊழியருக்கு இரண்டு, மூன்று கணக்கு இருந்தால் அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு வேலை மாறிச் செல்லும்போது பழைய பிஎஃப் கணக்கிலிருந்து புதிய பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. மேலும், உடல்நலக் குறைவினால் வேலையை விட்டுப் போகும்போது, நிறுவனத்தை மூடும்போது, புராஜெக்ட் முடிவடைதல் போன்ற காரணங்களினால் பிஎஃப் கணக்கை முடித்துப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது. தவிர, ஐந்து ஆண்டு சர்வீஸுக்கு பிறகு, பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது டிடிஎஸ் இருக்காது. அதுவும் அந்த பிஎஃப் கணக்கு, ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றியி ருந்தாலும் இது பொருந்தும். ஐந்து வருடத்துக்கும் குறைவாக சர்வீஸ் வைத்திருந்து, அதே நேரத்தில் 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகப் பணம் எடுக்கும் போது டிடிஎஸ் பிடிக்கப்படாது.
எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படும்?
ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்'' என்றார்.
15ஜி மற்றும் 15ஹெச் எப்போது ஏற்றுக் கொள்ளப்படும்?
மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) படிவம் 15ஹெச், மற்றவர்கள் 15ஜி படிவமும் சமர்பிக்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் இந்தப் படிவம் கொடுக்க வேண்டும்.
படிவம் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தில் சுயகையொப்பமிட்டு சமர்பிக்கும்போது சில சமயங்களில் மட்டும் இந்தப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
பொதுப் பிரிவினர் ரூ.2.5 லட்சத்துக்கும், மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சத்துக்கும் மேல் பிஎஃப் தொகை எடுக்கும்போது, 15ஜி மற்றும் 15ஹெச் ஏற்றுக் கொள்ளப்படாது.
பிஎஃப் தொகையை எடுக்க 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைப் பூர்த்திச் செய்யும்போது அதில் பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம்.
வரிக்கு உட்பட்ட வருமானம் ஏதும் இல்லையெனில் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைச் சமர்பிக்கலாம்.
பிஎஃப் உறுப்பினர் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக 5 வருடமோ அல்லது அதற்கு அதிகமாகவோ வேலை பார்த்த பிறகு பணத்தை எடுத்தால் 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
குறிப்பிட்ட சில காரணங்களினால் வேலை இழக்கும்போது பான் கார்டு, 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
இந்த டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதால் அதிகமாகப் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான். அதாவது, சின்னச் சின்ன வேலைகள் செய்வதற்காக சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து வேலை பார்ப்பவர்களிடம் பான் கார்டு இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு.
இவர்கள் பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்யும்போது அதில் டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தால் ரூ.30 ஆயிரத்துக்கு ரூ.10,382 பிடித்தம் செய்யப்படும்.
இந்தத் தொகையை வரி தாக்கல் செய்துதான் திரும்பப் பெற முடியும். இதுவும் அவர்களுக்குச் சாத்தியம் இல்லை. எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் வரம்புக்குட்பட்ட தொகையை அதிகப்படுத்துவது அல்லது குறிப்பிட்ட சில துறையில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் டிடிஎஸ் என வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரது கருத்து!
வரி செலுத்த வேண்டுமா?
5 வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து பணத்தை எடுக்கும்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். அவரவர் வருமான வரி வரம்புக்கு ஏற்றாற்போல்் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல பிஎஃப் தொகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதை வருமான வரி கணக்குத் தாக்கலில் காண்பிக்க வேண்டும். வருமான வரிக்கு உட்படாமல் மொத்த வருமானம் இருந்தால் இந்த டிடிஎஸ் தொகையை திரும்பப் பெற முடியும்.
<நன்றி :- விகடன்
No comments:
Post a Comment