1968 டிசம்பர் 25 தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.ஆம்.அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருக்கிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை. விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர்.
இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று தஞ்சை (இன்றைய நாகை) வட்டார நிலப்பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச்சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான் அந்த உச்சகட்டக் கொடுமை நடந்தது.
25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றிக்கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து, கட்டை அவிழ்த்து விட்டுச் சென்றனர். அதன் பின்பு பெருமிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள். அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடிவிட்டனர். தப்பித்து ஓடமுடியாத பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள். ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர்.
தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன. இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் (கீழ்வேளூர்) காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான்சாகும் பொழுதும் தான்வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக்கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த வெண்மணி தியாகிகள் நினைவு நாளை நினைவு கூறுவோம் .
No comments:
Post a Comment