பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை கூறுபோட முயற்சிக்கும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கனவை தகர்ப்போம் என்று சென்னையில் செவ்வாயன்று (ஜன.7) நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.அபிமன்யு பணி நிறைவு பாராட்டு விழாவில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.
தலைவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.கே.பத்மநாபன்
நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் 60 சதவீத தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டியுள்ளது. இங்கேபேசிய பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு இயக்குநர் ஏ.என்.ராய் கூறியது போல் வருங்காலம் பொதுத்துறை நிறுவனங்களின் காலமாக இருக்கப்போகிறது. மீண்டும் பொதுத்துறை நிறுவனங்களின் தேவை எழுந்துள்ளது. அப்படிப்பட்ட காலம் வெகு விரைவாக வரப்போகிறது. அப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் பெரும்லாபமீட்டும். கடந்த காலங்களை போல் அல்லாமல் நாட்டை பற்றி சிந்திக்கிற அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை பற்றி சிந்திக்கிற இயக்கமாக தொழிற்சங்க இயக்கம் மாறியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக நாட்டில் அமல்படுத்தப்படும் தாராளமய தனியார் மய உலகமய பொருளாதாரக் கொள்கைகளின் தாக்குதல்கள் தொழிற்சங்க ஒற்றுமை மேலும் பலப்படுத்தியுள்ளது. பிஎஸ் என்எல் என்ற பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கிற போராட்டத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்கிற போராட்டத்திலும் பிஎஸ்என்எல் தொழிலாளர்களும் ஊழியர்களும் முன்னிற்க வேண்டும். ஏனென்றால் பொதுத்துறை நிறுவனம் என்பது நாட்டின் சொத்து.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத்
பொதுத்துறை நிறுவனம் என்றாலே ஊழல் நிறைந்த பணித்திறன் குறைந்த நிறுவனம் என்று பொதுக் கருத்தை உருவாக்க ஒருசிலதீய சக்திகள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்றாலே ஊழல் என்று மாறிவிட்டதை 2ஜி அலைக்கற்றை ஊழலில் பார்த்தோம். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மட்டுமல்லாமல் ஊழியர்களின் பணிக்கலாச்சாரத்தை பற்றியும் பிஎஸ்என்எல்இயு பேசியிருப்பது பாராட்டுக்குரியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒழிக்க முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் கனவை தகர்த்து இந்தியாவில் அசைக்க முடியாத பொதுத்துறைநிறுவனம் பிஎஸ்என்எல் என்பதை நிலைநாட்ட தொழிலாளர்களின் ஒற்றுமை தொழிற்சங்க ஒற்றுமை என்பதே சங்கத்தின் அடிநாதமாக ஒலிக்கவேண்டும். பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொழிற்சங்கங்கள் தீவிரமாக போராட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மயமாக்க அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதிஏற்கும் விழாவாக இது அமைந்துள்ளது.
பிஎஸ்என்எல்இயூ அகில இந்திய தலைவர் வி.ஏ.என். நம்பூதிரி
டெலிகிராப் முறையை ஒழித்ததை போல் தரைவழிதொலைபேசி முறையை ஒழித்துக்கட்ட தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருவதாக எகனாமிக் டைம்ஸ் ஏடு அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. ஏனென்றால் தரைவழி தொலைபேசி முறையை ஒழித்துவிட்டால் பிஎஸ்என்எல் தானாக ஒழிந்துவிடும் என்று சில தனியார் நிறுவனங்கள் கருதுகின்றன. தரைவழி தொலைபேசி முறை ஒழிக்கப்பட்டால் அதோடு பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒழிக்கப்பட்டு விடும். எனவே தனியார் நிறுவனங்களின் முயற்சியை முறியடிக்க ஒன்றுபடு, போராடு, முன்னேறு என்ற நமது முன்னோடிகளின் முழக்கத்தில் உறுதியாக இருக்கவேண்டும். தொழிற்சங்கங்களுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மத்திய அரசின் புதிய தாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்ப்பதில் ஒன்றுபடவேண்டும். அபிமன்யு போன்ற தொழிற்சங்கத்தலைவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொழிலாளி வர்க்கத்திற்காக பணியாற்றுவதில் நமக்கு ஒய்வே இல்லை.
ஏற்புரை நிகழ்த்திய தோழர் பி.அபிமன்யு
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கல் தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக முக்கியத்துறையாக உள்ள பிஎஸ்என்எல் தனியார்மயமானால் நமது நாட்டின் ரகசியங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்று விடும். எனவே பொதுத்துறை என்ற பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் மயமாவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆபத்தாக முடியும்.
தோழமை சங்கத் தலைவர்கள் வாழ்த்து
பிஎஸ்என்எல்இயு தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.மாரிமுத்து, பிஎஸ்என்எல்இயு சென்னை தொலைபேசி மாநிலத்தலைவர் எஸ்.யோகலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அகில இந்திய துணைத்தலைவர் புனிதா உதயகுமார், மாநில செயலாளர் எஸ்.செல்லப்பா, சென்னை தொலைபேசி மாநில செயலாளர் கே.கோவிந்தராஜ், என்எஃப்டிஇ முன்னாள் மாநில செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஃப்என்டிஓ முன்னாள் பொதுச்செயலாளர் கே.வள்ளிநாயகம், தொலைபேசி ஊழியர் முன்னேற்றச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.சுப்புராமன், சேவா பிஎஸ் என்எல் பொதுச் செயலாளர் ஆர்.ரவீந்திரன், ஆர்.பட்டாபிராமன் (என்எஃப்டிஇ), எம்.கோபிநாதன் (எஸ்என்இஏ), எம்.முருகையா (டிஎன்டிசிடபிள்யூயு), வி.பி.இந்திரா (பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு), சி.கே.நரசிம்மன், (ஏஐபிடிபிஏ), பி.ஆண்டியப்பன் (எப்என்டிஓபிஇஏ), டி.எஸ்.ராம்பிரபு (என்எப்டிபிஇ), கே.சுவாமிநாதன் (காப்பீட்டு ஊழியர் சங்கம்) ஆகியோரும் அபிமன்யுவின் பணிகளை பாராட்டிப் பேசினர்.
அபிமன்யு பணி ஒய்வு பெற்றாலும் தொழிற்சங்கத்திற்கும் சமூகத்திற்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அனைவரும் கேட்டுக்கொண்டனர்.
அபிமன்யு பணி ஒய்வு பெற்றாலும் தொழிற்சங்கத்திற்கும் சமூகத்திற்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அனைவரும் கேட்டுக்கொண்டனர்.
புதுவை அமைச்சரவையின் முடிவை ரத்து செய்தவர்
புதுவையில் அபிமன்யு தொழில் அமைதியை சீர்குலைக்கிறார். தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார். எனவே அவரை உடனடியாக புதுவையில் இருந்து தொலைதூரத்திற்கு பணியிடமாறுதல் செய்யவேண்டும் என்று 1992ல் அம் மாநில அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி அபிமன்யு தருமபுரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஒரு தொழிற்சங்க தலைவரை இடம்மாற்றம் செய்ய ஒரு மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது இதுதான் முதல் முறையாக இருந்திருக்கும். அந்த தீர்மானம் அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் அபிமன்யுவை பணியிட மாறுதல் செய்யக்கூடாது என்று தொலைத்தொடர்பு துறை தொழிலாளர்களும் ஊழியர்களும் தீவிரமான போராட்டத்தையும் நடத்தினர். பின்னர் அமைச்சர் இறங்கிவந்து பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய முன்வந்தார். ஆனால் அதற்கு அவர் விதித்த ஒரே நிபந்தனை, தொலைத்தொடர்பு ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடவேண்டும். காரணம் அவர்கள் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் ஒரு தொலைபேசிகூட வேலை செய்யவில்லை என்றார்.
(விழாவில் பிஎஸ்என்எல்இயு தமிழ்நாடு மாநில செயலாளர்எஸ்.செல்லப்பா ஆற்றிய உரையிலிருந்து)
< நன்றி :- தீக்கதிர் >
No comments:
Post a Comment