இன்றைய மத்திய பட்ஜெட்டில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த பத்தாண்டுகளில் பாடிய அதே பல்லவியை பாடினார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ஒரு சில அறிவிப்புகளை தவிர்த்து பார்த்தால் சொல்லிக் கொள்ளும் படியான பெரிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. கடந்த, காங்கிரஸ் தலைமையிலான அரசின் அனைத்து 10 பட்ஜெட்களிலும் தவறாமல் இடம் பெறுவது, வறுமை ஒழிப்பு, ஊரக மேம்பாடு, சாலை மேம்பாடு, சுகாதாரம், சுத்தம் என்ற வார்த்தைகள். ஆனால் இதை நிறைவேற்ற சொல்லிக் கொள்ளும் பெரிய திட்டம் எதையும் கொண்டு வரவில்லை
ஜேட்லியின் முதல் பட்ஜெட்டிலும் இதே வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் செயல் திட்டம் வரையறுக்கப்படவில்லை. எனவே, வழக்கம்போல காகித உரையாகத்தான் இது பார்க்கப்படுகிறது. எந்த திட்டத்தையுமே எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற விவரம் இல்லாதது மட்டுமின்றி, போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. அதே நேரம், வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டது பெரும்பான்மையோரால் பாராட்டப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி மீதான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதும், வீட்டுக் கடன் பெற்றோரை நிம்மதியடையச் செய்துள்ளது. கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட ரூ.2037 கோடி ஒரு பெரிய திட்டமாகும். நதிநீர் இணைப்பு குறித்து ஆய்வு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது நல்ல திட்டமாகும். மற்றபடி புதிய திட்டங்கள் எதுவுமில்லாமல், புதிய கோப்பையில் பரிமாறப்பட்ட பழைய ஒயினாகவே காட்சியளிக்கிறது மோடி அரசின் முதலாவது பட்ஜெட். மக்கள் விலைவாசி உயர்வால் பசியும் பட்டினியுமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வரிகளை குறைக்க இந்த நிதியை பயன்படுத்தியிருக்கலாம். லக்னோ மற்றும் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில், திட்டம் அமைக்க ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கிய ஜெட்லி, சிலைக்கு 200 கோடியை ஒதுக்கியுள்ளார். மெட்ரோ திட்டத்தின் ஆய்வுக்கே அவர் ஒதுக்கிய நிதி போதாது.
<நன்றி :- ஒன் இந்தியா >
No comments:
Post a Comment