மத்திய ஐ.மு.கூட்டணி-2 அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக் கைகளுக்குக்கூட செவி மடுக்க மறுப்பதைக் கண்டித்தும், அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்புமாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்தியத் தொழிற்சங்கங்களின் சார்பில் தேசிய சிறப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பிலும் மத்திய அரசு ஊழியர் களின் மகாசம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர்கள் அலுவலர்கள் கூட்ட மைப்பு, பாதுகாப்புத்துறை ஊழியர்கள், இன்சூரன்ஸ், வங்கி ஊழியர்கள், ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு உட்பட அனைத்து சங்கங்களின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.கடந்த பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெற்ற இருநாள் வேலை நிறுத்தத்தில் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளை மாநாட்டுப் பிரதிநிதிகள் முழக்கமிட்டு எதிரொலித்தார்கள். மத்திய அரசாங்கத்தின் சார்பில் மே 22 அன்று மத்தியத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ஒரு மாதம் கழித்து அரசுடன் கலந்தாலோசனை செய்து விட்டு சந்திப்பதாகக் கூறினார். ஆயினும் இதுவரையிலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.மாறாக, அது தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.
அரசின் இந்த அலட்சியத்திற்கு எதிராக பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டனர். தனியாருக்கு ஆலையைத் தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எதிராக நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப்பின்னணியிலேயே தேசிய சிறப்பு மாநாடு நடைபெற்றது.
சிறப்பு மாநாட்டினை சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மநாபன் உட்பட 11 மத்தியத் தொழிற்சங்கங்களின் மூத்த தலைவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார்கள். மாநாட்டின் வரைவுப் பிரகடனத்தை வெளியிட்டு தபன்சென் (சிஐடியு), குரு தாஸ் தாஸ் குப்தா (ஏஐ டியுசி), பிஎன் ராய் (பிஎம் எஸ்), கேகே நாயர் (ஐஎன் டியுசி), பேச்சிமுத்து (தொமுச) உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களிலிருந்தும் தலைவர்கள் உரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.தொழிலாளர் போராட் டத்தை நாடு தழுவிய அளவில் விரிவாக எடுத்துச் செல்வது என்றும், மாநிலத் தலைநகரங்களில் 2013 செப்டம்பர் 23 அன்று பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது என்றும், டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்டமான முறையில் பேரணி / ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்தது. தில்லியில் பேரணி நடைபெறும் நாளன்று நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டங்கள் / பேரணிகள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திக்கு :-CLICK HERE
No comments:
Post a Comment