Saturday, June 22, 2013

என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!


          தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பொதுத்துறை பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்தது. இதனடிப்படையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 93.55% பங்குகள் உள்ளன. இதில் 10% பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார கமிட்டி கூட்டத்தில் என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 
          என்.எல்.சி. பங்கு விற்பனை மூலம் ரூ. 466 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 7.8 கோடி பங்குகள் விற்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு ரூ. 466 கோடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வேகமாக செயல்படுத்தப்படும் என பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி.யின் 10% பங்குகளை விற்க முயற்சித்த போது, மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் கூட தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
          என்.எல்.சி.யின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ள செய்தி வெளியானதும் கடந்த மாதமே மார்க்சிஸ்ட் தனது எதிர்ப்பை தெரிவித்தது. பங்கு விற்பனையை கைவிடுமாறு தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுத்துறையை அழித்து தனியார்மயத்துக்கு வலுவூட்டும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
          ஆண்டுக்கு ரூ. 1,400 கோடி இலாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, வெறும் ரூ. 466 கோடி திரட்டி மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் உண்மையான நோக்கம் என்.எல்.சி. நிறுவனத்தைப் படிப்படியாக தனியாருக்குத் தாரைவார்க்க வேண்டும் என்பதுதான்.
          மின்சாரத் தேவைக்காக தமிழக மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் பொழுது, மிகக் குறைந்த விலையில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் அளிக்கும் என்.எல்.சி. தனியார்மயமானால் தமிழக அரசு அதிக விலை கொடுத்து அங்கு உற்பத்தி ஆகும் மின்சாரத்தை வாங்க வேண்டி வரும். இதனால் ஏற்படும் சுமை முழுவதும் மக்கள் மீதுதான் ஏற்றப்படும்.
          நாட்டின் வளங்களைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2 ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ. 1.76 இலட்சம் கோடி, நிலக்கரி ஊழலில் ரூ. 1.86 இலட்சம் கோடி இன்னும் பல்வேறு ஊழல்களின் மூலம் நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது என்.எல்.சி. போன்று நாட்டுக்குப் பயன்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து, தனியாருக்குத் தாரை வார்க்க துடித்துக் கொண்டிருக்கிறது.
          என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மேலும் ஒரு துரோகமாகும். என்.எல்.சி. தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள மத்திய அரசு, உடனடியாக 5 சதவிகித பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று ம தி மு க தலைவர் திரு.வை.கோ வலியுறுத்தியுள்ளார்.இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், அந்த மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. தனியாரிடம் விற்பனை செய்தால் மக்கள் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்றெல்லாம் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
          மத்திய அரசு தனது 5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலமாக 466 கோடி ரூபாய் தான் மத்திய அரசுக்கு கிடைக்கக் கூடுமென்று தெரிகிறது. மத்திய அரசுக்கு இது ஒரு பெரும் தொகையல்ல. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10 சதவிகிதம் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்ற இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்திருப்பதின் அடிப்படையிலேதான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறக்கூடும். ஆனால் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்களிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்திலே திருத்தம் கொண்டு வரலாம், அல்லது என்.எல்.சி நிறுவனத்தையே பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலிலே இருந்து நீக்கி விடலாம் என்று தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதையும் மத்திய அரசு கருத்திலே கொண்டும், ஏற்கனவே இதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு பின்னர் தமிழகத்தின் வேண்டுகோளையேற்று அந்த முடிவினை தள்ளி வைத்ததை மனதிலே கொண்டும், தற்போது மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவினை ரத்து செய்ய வேண்டுமென்று திமுகவின் சார்பில் திரு மு.கருணாநிதி  மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் என்.எல்.சி. பங்குகளை விற்க கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். நன்றி :- ONE INDIA 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...