Monday, May 25, 2015

டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்!

நன்றி :விகடன் 
டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிகள் தாண்டி விடும் என்ற “சாதனையை” நோக்கி தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது.இதைப்போல வேறு வருமானம் அரசுக்கு இல்லை என்று சொல்லி மக்களை சாக வைத்தாவது டாஸ்மாக் சரக்கின் வருமானத்தின் மூலம் அரசு ஊழியருக்கு சம்பளமும், ஓட்டு வாங்க 'இலவசம்' என்ற பெயரில் லஞ்சமும் கொடுக்க முடிகிறது. டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு என்ற பெயரில் இருந்து டாஸ்மாக் மக்களை வாழவைக்கும் “சாதனைக்குரிய” திரவமாக மாறி விட்டது. உணவுப்பொருளில் கலப்படம் என்றால் கூட வழக்கு போடும் சட்டமுள்ள இந்த நாட்டில் " விஷமே உணவாக " வழங்கப்படுவதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது சட்டம்,கணவனைக் காணவில்லை, மகனை காணவில்லை என்று காவல் நிலையம் செலவதற்கு முன் டாஸ்மாக் கடையில் பார்த்து விட்டு புகார் கொடுக்கச் சொல்லும் அளவிற்கு டாஸ்மாக் கடையால் "காணாமல் போனவர்கள்" அதிகம். 108 அவசர வண்டி குடிகாரருக்கு மட்டுமே சொந்தம் எனபது போல குடியால் விபத்து, இருதய நோயாளிகள், மூளைச் சாவு அடைந்தவர்கள் 108 ஐ ஆக்கிரமித்து விட்டனர்.

திருமணம்,கோவில் திருவிழா என்றால் முன்பெல்லாம் மகிழ்ச்சியுடன் உறவினர்கள், நண்பர்கள் குடும்ப உறவுகளை ஒற்றுமைப்படுத்தும் என்ற நிலை மாறி திருமணம் என்றால் திடீர் போதைச் சண்டையும், கோவில் திருவிழா என்றால் போதை ஆசாமிகள் செய்யும் அடாவடியால் போலீஸ் தடியடியும் , சாலை மறியலும் அன்றாடச் செய்தியாகி விட்டன.தெய்வத்தால் நிம்மதி கிடைக்கும் என்று சொல்வதற்கு பதிலாக, மன நிம்மதியற்று அடுத்த முறை திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்லக் கூடாது என்ற அளவிற்கு குடி போதையால் நடக்கும் கோவில் வன்முறைகள் குல தெய்வத்தை மறக்கச் செய்கின்றன.இலங்கையில் நடந்த இன அழிப்பை விட மோசமான இன அழிப்பு இங்கு நடைபெறுகிறது. அங்கு கொத்துக் கொத்தாக அணு குண்டு வீசினார்கள். இங்கு குவார்டர் குவார்டராக விஷம் ஊற்றுகிறார்கள். அங்கு சாவதற்கு பணம் வாங்கவில்லை. இங்கு சாவதற்கு முன்பணம் ஒவ்வொரு முறையும் அரசு வாங்கிக்'கொல்'கிறது”

வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்த தமிழன், இன்று வார இறுதி நாட்கள் என்றாலே காலை முதல் மறுநாள் திங்கள் காலை வரை அசைவ உணவுக்கு அடிமையாகி ,டாஸ்மாக் சரக்குடன் நடு ரோட்டில், டாஸ்மாக் கடையில் மயக்கத்தில் மன நோயாளி போல படுத்துக் கிடக்கின்றான்.திரைப்படங்களிலோ, பத்து நிமிடத்திற்கு ஒரு முறை டாஸ்மாக் விளம்பரப்படமா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு போதைகாட்சிகளும், மகளே தந்தைக்கு பாசத்தில் ஊற்றிக்கொடுக்கும் "பாசமலர் " காட்சிகளும், காதலிக்கும் பெண்ணும் குடிப்பாள் என்ற"தத்துவமும்" சொல்லும் விதமான காட்சிகள்.அதேப்போன்று மெகாத் தொடர்களும் மக்களை டாஸ்மாக் சரக்கை சாகும் வரை மறக்க முடியாதபடி செய்கின்றன.டாஸ்மாக் கடையால் காவலர்களுக்கு கிடைக்கும் லாபமும் அதிகம். அன்றாடம் மதுவால் நடக்கும் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு தேடி வரும் மக்களிடமும், போதையால் வாகனம் ஒட்டுபவர்களிடம் "கவனித்து" வாகன ஓட்டிகளை அனுப்புவதும், ஒரு கையால் மதுவுடன் வண்டி ஓட்டுபவரை பிடிதுக்கொடுத்தாலும் பெரிய கேஸ் போடாமல் "கடமையை" செய்வதும், பெட்டி கேஸ் போடத் தேவையான தெருச் சண்டை களும் காவலர்கள் வாழ்வை வளமாக்கி வருகிறது. மாதந்தோறும் குற்ற வழக்கு கணக்கு காட்ட குற்ற வழக்கைத் தேடி அலைந்த போலீசார், காவல் நிலையத் தை விட்டு வெளியே செல்லாமல் குடி போதையால் நடக்கும் வன்முறை புகார்களுக்கு கட்ட பஞ்சாயத்து செய்யவே நேரம் இல்லாமல் திணறி வருகின்றனர்.ஏற்கனவே கேரளா, வட மாநிலத்தவர் ஆதிக்கத்தில் தமிழகம் தமிழர்களை தேடும் நிலைக்கு வந்துவிடு மோ என நினைக்கும் வேளையில், மதுவால் தமிழர்களின் மலட்டுத்தன்மை அதிகரித்து தமிழ் இனம் அழியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இன்றைக்குள்ள இளைய சமூகத்தினரின் பெரும்பாலான மது குடிப்போரின் பிரச்னையே நரம்புத் தளர்ச்சியும், ஆண்மை குறைவும்தான்.முதல்வர் வழக்கில் இருந்து விடுதலையாக எத்தனையோ பரிகாரங்கள் செய்துள்ளார். அதை எல்லாம் விட சக்தி வாய்ந்த பரிகாரம் மக்களின் ஏகோபித்த வாழ்த்தும், ஆசிர்வாதமும்தான். அதை மீறிய பரிகாரம் ஏதும் கிடையாது. அந்த வாழ்த்து டாஸ்மாக் கடை மூடுவதன் மூலம் நிச்சயம் கிடைக்கும்.


ஒரு காலத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டவுடன் அரசு என்ன நஷ்டத்தில் ஓடிப்போய் விட்டது?? அது போலத்தான் துணிவுடன் 'டாஸ்மாக்'கை தடை செய்ய வேண்டும். அரசுக்கு வருமானம் இல்லை என்பதும், அதனால்தான் டாஸ்மாக் சரக்கை ஊற்றிக்கொடுக்கிறது எனச் சொல்வதும் அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழி இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது. அனைத்து கனிம வளங்களையும் அரசு கைப்பற்றி நேரடியாக அல்லது தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலமாகவோ ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்க முடியும். அரசை ஏமாற்றி சம்பாதித்தவர்களே பல லட்சம் கோடிகள் குவிக்கும்போது அரசே நேரடியாக ஏற்றுமதி செய்யும்போது ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிகள் பெற முடியாதா?? அரசு தமிழகத்தில் இருந்து தாது மண், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்து கனிம வளத்தை கைப்பற்ற வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் இரண்டு வண்டி வைத்தது தொழில் ஆரம்பித்த ஆம்னி பஸ் நிறுவனம், இன்று 200 வண்டிகள் வாங்கும் அளவிற்கு ஒரு கையில் மதுவுடன் வண்டி ஒட்டி சம்பாதிக்கும் நிலையில், அரசு பேருந்து மட்டும் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க சென்னை ஐ. ஐ.டி மாணவர்கள் குழுவைக கொண்டு ஆராய வேண்டும். பார்சல் போக்குவரத்தை அரசு தொடங்க வேண்டும்.நகரில் ஷேர் ஆட்டோக்களை ஒழித்து அரசு சிற்றுந்து பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும்.உங்கள் வழக்கு விடுதலைக்காக கோவில் கோவிலாகச் சென்ற மக்கள் பல லட்சம், அவர்களில் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேற்றியவர்கள் அதிகம்.அவர்கள் குடும்ப நலனுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள்? இலவசம் அளித்து மனிதர்களை கொல்வதைக் காட்டிலும், இலவசம் இல்லாமல் இனிமையான வாழ்விற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவது மக்களின் நிம்மதிக்கு வழி வகுக்கும் என்பதே உண்மை.
அம்மா செய்வார்களா?

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...