Saturday, October 22, 2016

பிஎஸ்என்எல் லாபம் ஈட்டியதில் ஊழியர் சங்கத்திற்கும் பெரும்பங்கு உள்ளது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு




பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தின் 8வது அகில இந்திய மாநாடு வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான வரவேற்புக் குழு கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் வியாழனன்று (அக். 20) சென்னையில் நடைபெற்றது.சர்க்கிள் செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் வரவேற்றார்.டி.கே.ரங்கராஜன் பேசுகையில் பிஎஸ்என்எல் முந்தைய ஆண்டுகளை விட கடந்தாண்டு லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஊழியர் சங்கத்திற் கும் பெரும் பங்குள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக இங் குள்ள தொழிலாளர்கள் சுரண்டப் படுகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஷரத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் வர்க் கம் அவர்களது நோக்கத்தை மட்டுமே நோக்கி பயணிக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்து வராதவர்களை வெளியே எடுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று சொன்ன ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனை அப்பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. படித்து வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்தான் புதிய கல்விக் கொள்கையை அறிவித்து அதன்மூலம் கல்விதர மறுக்கிறது மத்திய அரசு. அனைவருக்கும் இலவச கல்வி, வேலை , ஆண் பெண் சமத் துவம் என்பது ஜனநாயக கோஷம். தீண்டாமை, ஆணவப் படுகொலை இவற்றுக்கெதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்றார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத் பேசுகையில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கை என்பது தொழிலாளர் களை மட்டும் பாதிக்கவில்லை. அது தேச விரோதக் கொள்கையாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் சாதகமான கொள்கை. இதை ஊழியர் சங்கம் முறியடிக்கும். ஒப்பந்த முறையை எதிர்க்கிறோம். அதே நேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. செப். 2 ஒரு நாள் வேலை நிறுத்தம் என்பது மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வருங் காலங்களில் தொடர் வேலை நிறுத்தமாக நடைபெறும். மதவாத, வகுப்புவாத சக்திகளிடம் நாடு சிக்கிக் கொண்டுள்ளது.மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இதற்கெதிரான வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.பிஎஸ்என்எல்இயு பொதுச் செயலாளர் பி.அபிமன்யூ பேசுகையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்க மாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கும் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகித அடிப் படையில் பிரதிநிதித் துவம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அதிலும் வெற்றி பெற்றுள்ளது. தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்காமல் இருக்க மென்மேலும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பி.எஸ்.என்.எல். டவர்களை தனிநிறுவனமாக மாற்றும் முயற் சியை எதிர்த்து, வரும் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரதூதராக இருக்கி றார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பி.எஸ்.என்.எல்.தான் போட்டியாக உள்ளது. மாதா மாதம் இணைப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.ரிலையன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஜியோவை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த மாதம் மட்டும் பி.எஸ்.என்.எல். 2,50,000 புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இலவச வாய்ஸ் காலை வழங்க உள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம். இதற்கு ஊழியர் சங்கத் திற்கு பெரும் பங்குண்டு என்றார்.சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில் தொலைதொடர்புத் துறை ஊழியர்களுக்கு இது சவால்கள் நிறைந்த காலம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி. ஆனால் இந்திய பிரதமர் மோடி அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஆதரவாக இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறார். மேலும் 24 மணி நேரமும் தனியார்மய சிந்தனையிலேயே செயல் படுகிறார் நம் பாரத பிரதமர் மோடி. இந்திய நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஊழியர் சங்கம் ஊழியர்களின் கோரிக்கையோடு நிறுவனத்தையும் பாதுகாக்கப் போராடி வருவது பாராட்டுக்கு உரியது. அனைத்து போராட்டங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு போராட வேண்டும். உங்களது அனைத்துப் போராட்டத்திற்கும் சிஐடியு ஆதரவளிக்கும் என்றார்.சிஐடியு துணைச் செயலாளர் ஆர்.கருமலையான், ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, பி.எஸ்.என்.எல். பெண்கள் அமைப்பின் கன்வீனர் பி.இந்திரா, போஸ்டல் ஊழியர் சங்க நிர்வாகி ஜி.கண்ணன், காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகி டி.செந்தில்குமார் உள்ளிட்டோரும் பேசினர். மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் 3 லட்ச ரூபாயும், நாகர்கோயில்  மாவட்டம் சார்பில் 3.25 லட்ச ரூபாயும், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் முதல் தவணையாக 22 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. ஊழியர் சங்கத்தின் பொருளாளர் கே.சீனிவாசன் நன்றி கூறினார். இதில் ஊழியர் சங்க நிர்வாகி கே.கோவிந்தராஜ், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.முருகைய்யா, சி.பழனிச்சாமி மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நன்றி :- தீக்கதிர்

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...