பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு ஒரு மோசடி நாடகம் என தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் பெட்ரோலியத்துறை 01.12.2014 முதல் டீசல், பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளதாகச் சொல்வது பன்னாட்டு பெட்ரோலிய விலைக்குத் தொடர்பில்லாத மோசடி அறிவிப்பாகும். கடந்த 01.06.2014 அன்று பெட்ரோலியத்தின் பன்னாட்டு சந்தை விலை ஒரு பீப்பாய்க்கு 105.47 அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒரு பீப்பாய் என்பது ஏறத்தாழ 119 லிட்டரைக் குறிக்கும். ஜூன் மாதம் ஒன்றாம் நாள் நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ரூபாயின் மதிப்பு 59.19 ரூபாய் ஆகும். இதன்படி பார்த்தால் பெட்ரோலியத்தின் ஒரு லிட்டர் பன்னாட்டு விலை 01.06.2014 அன்று 52.46 ரூபாய் ஆகும். அதே நாளில் இந்திய அரசின் பெட்ரோலியத் துறை ஒரு லிட்டர் டீசல் 51.12 ரூபாய் என்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.60 ரூபாய் என்றும் விலை அறிவித்தது.01.12.2014 ஆம் நாள் பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை பீப்பாய்க்கு 65 டாலர். அதாவது இன்றைய நிலவரப்படி ரூபாய் கணக்கில் லிட்டருக்கு 33.94 ரூபாய்.அதாவது 2014 ஜூன் 1ஐ ஒப்பிட 2014 டிசம்பர் 1 அன்று பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை 61 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன்படி பார்த்தால் இந்திய அரசு டீசல் விலையை வரி உட்பட லிட்டருக்கு 37.28 ரூபாய் என்றும், பெட்ரோல் விலையை 40.29 ரூபாய் என்றும் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் விற்பனை வரியையும் சேர்த்து டீசல் விலையை 55.99 ரூபாய் என்றும் பெட்ரோல் விலையை வரி உட்பட 66.04 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது. உண்மையில் பன்னாட்டு விலையை விடப் பெட்ரோல் லிட்டருக்கு 25.76 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. டீசல் விலை பன்னாட்டு விலையை விட லிட்டருக்கு 18.71 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதாக இந்திய அரசு தம்பட்டம் அடிப்பது அப்பட்டமான மோசடியாகும்.பன்னாட்டு விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் பெயருக்கு விலைக் குறைப்பு அறிவித்திருப்பதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. முதலாவது பெட்ரோலியப் பொருட்கள் மீதான இந்தியஅரசின் வரி வருவாய் ஆகும். ஒவ்வொரு வரவு, செலவு திட்டத்திலும் இந்திய அரசின் வரி வருவாய் வழிகளில் முதன்மையானதாக பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாயே இருக்கிறது. இதனைத் தொடர்வதற்குப் பன்னாட்டு விலைக்குத் தொடர்பில்லாமல் குறைவான விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இன்னொரு காரணம் பெட்ரோலியத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் ரிலையன்ஸ், எஸ்சார் போன்ற தனியார் குழுமங்களின் மிகை இலாபத்தை உறுதி செய்வது ஆகும். பன்னாட்டு விலை குறைந்த போதும். அதற்குத் தொடர்பில்லாத வகையில் அதிக விலையில் பெட்ரோல், டீசல் இந்தியச் சந்தையில் விற்பதன் மூலம் இத்தனியார் குழுமங்கள் மிகை லாபம் அடைகின்றன. இக்குழுமங்கள்தான் நரேந்திர மோடியின் தோற்றத்தைப் பெரிதுபடுத்திக் காட்டி அவர் வெற்றிக்கு துணை செய்தன.மக்கள் தலையில் பெட்ரோல், டீசல் விலையை அதிக அளவில் சுமத்துவதோடு நிற்காமல் விலை குறைத்துவிட்டதாக நாடகமாடுகிறது மோடி அரசு. மக்கள் இந்த மோசடி அறிவிப்பினால் ஏமாந்து விடக் கூடாது. மத்தியஅரசு பெட்ரோலியத்தின் பன்னாட்டு சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
< நன்றி :தினமணி >
< நன்றி :தினமணி >
No comments:
Post a Comment