Monday, June 10, 2013

78.2 IDA இணைப்பில் BSNLEU சங்கத்தின் மகத்தான பங்களிப்பு

          பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைத்து 01-01-2007 முதல் ஊதிய நிர்ணயம் செய்திட உத்தரவு வெளியாகி விட்டது. (DoT உத்தர்வு எண் 61-01/2012-SU dt. 10-06-2013) 12-06-13முதல் போராட்டம் என்ற அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் சங்க போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் 12-06-2012ல் ஏற்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது மாபெரும் சாதனை. இது அனைத்து ஊழியர்கள் , அதிகாரிகள் சங்கங்களுக்கு கிடைத்த வெற்றி.

          இதற்கு காரணமான ஊழியர்கள்- அதிகாரிகள் கூட்டமைப்பிற்கும் அதனைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கின்ற அதன் அமைப்பாளர் தோழர் பி.அபிமன்யூ (பொதுச்செயலர் BSNLEU) அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

          தற்போது 78.2% பஞ்சப்படி இணைப்பு பிரச்சனையை நாங்கள் தான் தீர்வு செய்தோம் என்று வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் வேலையில் NFTE நண்பர்கள் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்து கொள்ளட்டும். ஆனால், அவ்வாறு செய்யும் போது, BSNL ஊழியர் சங்கம் பெற்றுத் தந்த ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தைக் குறை கூற அவர்கள் முற்படுகிறார்கள். அதனை நாம் அனுமதிக்க முடியாது. “ஊதிய மாற்றத்தின்போது, BSNL ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளும் அநீதிகளும் இப்போது சரி செய்யப்பட்டுள்ளன” என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

          அதிகாரிகளுக்கு 68.8% பஞ்சப்படி மட்டுமே இணைக்கப்பட்டதால், ஊழியர்களுக்கும் 68.8% பஞ்சப்படி மட்டுமே இணைக்கப்படும் என்றுதான் ஊதிய மாற்றத்தின்போது நிர்வாகம் முன்வைத்தது என்பதை அனைவரும் அறிவர். 68.8% பஞ்சப்படியை ஏற்றுக்கொண்டு ஊதிய மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்வாகம் BSNL ஊழியர் சங்கத்தை நிர்பந்தம் செய்தது. ஆனால், BSNL ஊழியர் சங்கம் அதை உறுதியோடு மறுத்து விட்டதோடு, 78.2% பஞ்சப்படியை இணைக்குமாறு போராடிய BSNL ஊழியர் சங்கம், 78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி, இரண்டு நாள் வேலை நிறுத்தத்தையும் நடத்தியது. இறுதியாக, அதிகாரிகளுக்கு வழங்கப்படும்போது ஊழியர்களுக்கும் 78.2% பஞ்சப்படி இணைப்பு வழங்கப் படும் என்பதை உறுதி செய்து, BSNL ஊழியர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது.

          அவ்வாறு நாம் ஒப்பந்தத்தில் உறுதி செய்து கொண்டதால்தான், இப்போது மீண்டும் 78.2% பஞ்சப்படி இணைப்புப் பிரச்னையை நாம் மீண்டும் எழுப்பவும், – DoT யையும் BSNL நிர்வாகத்தையும் தீர்வு காண வலியுறுத்தவும் நம்மால் முடிந்தது. BSNL ஊழியர் சங்கம் 68.8% பஞ்சப்படி இணைப்பை ஊதியமாற்றத்தின்போது ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், 78.2% பஞ்சப்படி இணைப்பைப் பெறுவதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டுப்போயிருக்கும்.இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்.

          ஆனால், BSNL ஊழியர் சங்கம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தைக் குறைகூற முற்படும் சில நண்பர்கள், இப்போதாவது தங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பார்க்கட்டும்.ஊதிய மாற்றத்துக்காகவும், 78.2% பஞ்சப்படி இணைப்புக்காகவும் அவர்களுடைய பங்கு என்ன? BSNL ஊழியர் சங்கம் 78.2% பஞ்சப்படி இணைப்புடன் கூடிய ஊதிய மாற்றத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, இந்த நண்பர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஊதிய மாற்றத்தின் (68.8%) அடிப்படையில் ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றம் வழங்கும் உத்தரவை வெளியிடுமாறு அவர்கள் நிர்வாகத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். “அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டது போலவே ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்” என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது.

          ஊதிய மாற்றத்தின் போது, அதிகாரிகளுக்கு என்ன வழங்கப் பட்டது? 68.8% பஞ்சப்படி இணைப்பு மட்டுமே! BSNL ஊழியர் சங்கம் 68.8% பஞ்சப்படி இணைப்பை ஏற்றுக்கொள்ளாமல், 78.2% இணைப்பிற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, அந்த NFTE நண்பர்கள், ஊதிய மாற்றம் ஏற்படாமல் தடுக்கும் வீட்டோ அதிகாரத்தை BSNL ஊழியர் சங்கத்துக்கு கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? 78.2% பஞ்சப் படி இணைப்புக்கான அனைத்துக் கதவுகளும் மூடப் பட்டிருக்கும்.

          இந்த உண்மைகளையெல்லாம் மறந்து விட்டு, இந்த NFTE நண்பர்கள், இப்போது ஊழியர்களைத் திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.ஆனால் ஊழியர்கள் தெளிவாக இருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் கடந்த சங்க அங்கீகார தேர்தலின் போது செய்யப்பட்ட இந்தப் பொய்ப் பிரச்சாரங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, BSNL ஊழியர் சங்கத்துக்குத் தங்கள் பேராதரவை அள்ளித்தந்தனர்.

          புறந்தள்ளப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை இனியேனும் நிறுத்திக் கொள்ள வேண்டும் அந்த NFTE நண்பர்கள்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...