Tuesday, March 3, 2015

'பீர் உண்டு...பீப் கிடையாது!' - உணவை தீர்மானிக்கும் அரசாங்கங்கள்

மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதைக்கூட அரசாங்கங்கள் தீர்மானிப்பது என்பது இந்தியாவில் வெகு காலங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மகாராஷ்ட்ராவில் 'பீப்' எனப்படும் மாட்டிறைச்சி குறித்து மூச்சே விடக்கூடாது என்று கடுமையான தடையை விதித்து இருக்கிறார்கள். 
இருபது வருடங்களுக்கு முன்னர்ப் பி.ஜே.பி.-சிவசேனா அம்மாநிலத்தை ஆட்சி செய்தபொழுது கொண்டு வந்த MAPA (maharashtra animal preservation act) சட்டத்திருத்தம், இப்பொழுது ஜனாதிபதியின் ஒப்புதலில் அமலுக்கு வந்திருக்கிறது.1976 -ல் இச்சட்டம் இயற்றப்பட்டபொழுது பசுவைக் கொல்ல மட்டும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது எருமைகளையும், மாடுகளையும் இணைத்து இருக்கிறார்கள். பசு என்பது புனிதமான அம்சமாக இந்துக்களால் பார்க்கப்படுகிறது என்பது இதற்கு வைக்கப்படுகிற வாதம். ரிக் வேதத்தில் பசுவை புனிதமாகக் கருத வேண்டும் என்று சொல்லும் பாடல்கள் உண்டு. அதே சமயம் வேதகாலத்தில் பசு, எருமைகளைக் கூட்டம் கூட்டமாகப் பலியிடுவதும், உண்பதும் இயல்பாக நடந்த ஒன்று.
அம்பேத்கரின் வரிகளில்: 

"ரிக்வேத கால ஆரியர்கள் பசுவை உணவுக்காகக் கொன்றார்கள் என்பதும், எக்கச் சக்க பீப் உண்டார்கள் என்பதும் ரிக் வேதத்திலேயே தெளிவாக இருக்கிறது. ரிக் வேதத்தில் இந்திரன் சொல்கிறார், 'அவர்கள் பதினைந்து கூட்டல் இருபது காளைகளை உண்ண சமைக்கிறார்கள்' (X. 86.14). ரிக் வேதம் (X.91.14) அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப்பட்டன என்று சொல்கிறது. சதப்த பிராமணத்தில் வரும் பாடலே பசுவை புனிதமாக ரிக் வேதத்தில் குறித்தது. ஆனாலும், பலரும் பீப் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. ஆரியர்களின் மகாரிஷி யான யக்ஞவல்கியரும் பீப் சாப்பிடுபவராக இருந்தபடியால், அவரிடம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபொழுது, " நான் அம்மாமிசத்தை உண்கிற ஒருவனாக இருக்கிறேன். அதுவும் இளசாக இருந்தால் கட்டாயம் உண்பேன்." என்கிறார். 

சரி! அம்பேத்கர்தான் பொய் சொல்கிறார் என்று ஒரு போடு போடலாம் என்று பார்த்தால், விவேகானந்தரும் கவிழ்த்து விட்டார். அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்: "பழைய சடங்குகளின் படி பீப் சாப்பிடாத இந்து நல்ல இந்துவே கிடையாது என்று கருதப்பட்டது. சமயங்களில் அவன் ஒரு பெரிய மாட்டையே பலி கொடுத்து அதைச் சாப்பிட வேண்டி இருந்தது." என்கிறார். அக்பர், 1586-ல் ஒரு பிர்மான் போட்டு பசுவதையைத் தடை செய்திருக்கிறார். ஹைதர் அலி ஆட்சியிலும் பசுவதைத் தடை செய்யப்பட்டே இருந்திருக்கிறது. பசுவைக்கொன்றால் கைகளை வெட்டுகிற அளவுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 1857 புரட்சியின் பொழுது இந்துக்களின் நம்பிக்கைகளை மதித்துப் பசுவதையைத் தடை செய்வதாகப் பகதூர் ஷா அறிவித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஆரிய சமாஜ இயக்கம், பசுவதைக்கு எதிராக குரலெழுப்பி, அதனையே முக்கிய அரசியலாக மாற்றியது. ஐக்கிய மாகாணத்தை (தற்போதைய உத்தரபிரதேசம்) அந்த இயக்கம் பெரிய கலவர பூமியாக ஆக்கி, மத இணக்கத்தைக் குலைத்தது. பசுவை காப்பாற்றுவோம் என்கிற கோஷத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியினர் என்று எண்ணற்றோரின் உணவுத் தேர்வுகள், விருப்பங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. காந்தி, தீண்டப்படாதவர்கள் மது அருந்துவது, மாமிசம் உண்பது முதலிய அசுத்தமான செயல்களைச் செய்யக்கூடாது என்றும், இந்து மதத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று பசுவைக் காப்பது என்றும் 1927-ல் சொன்னார். ஆனால், எந்த வகையிலும் பசுவதையைச் சட்ட ரீதியாகவோ, கட்டாயத்தின் பெயரிலயோ தடை செய்வதை அவர் எதிர்த்தார். நல்லெண்ணம், புரிதல் ஆகியவற்றின் மூலமே அதைச் சாதிக்க முடியும். சட்ட ரீதியான தடை இன்னமும் பசுவதையை அதிகப்படுத்தவே செய்யும் என்று அவர் கருதினார்.

விடுதலைக்குப் பிறகு அறுபதுகளில் பல்வேறு மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போடப்பட் டன. இதனை எதிர்த்துச் சுப்ரீம் கோர்ட்டில் முகமது ஹனீப் குரேஷி தொடர்ந்த வழக்கில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் (குறிப்பாக இஸ்லாமிய கறி விற்பனையாளர்கள்) மனு செய்திருந்தார்கள். அதில் தங்களுடைய அடிப்படை சொத்துரிமை, வியாபாரம், தொழில் உரிமைகள், மத உரிமை ஆகியவற்றை இந்தத் தடைகள் பாதிப்பதாகச் சொன்னார்கள். அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. குரானை தன் பார்வையில் அணுகிய உச்சநீதிமன்றம், பசுவை பலிகொடுப்பது ஒன்றும் இஸ்லாமியர்களுக்குக் கட்டாயமில்லை என்று சொல்லிவிட்டது. அதே சமயம் பொருளாதார ரீதியாக மாடுகளைக் கொல்லாமல் பராமரிப்பது கடினமான ஒன்று என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டு, முழுமையாகப் பசுவை கொல்வதைத் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புத் தந்தது. 

1967 காலகட்டத்தில், பசுவதையை முழுமையாக அமல்படுத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர், வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பூரி சங்கராச்சாரியார் ஆகியோர் உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி மத்திய அரசால் அமைக்கப்பட்டது. பார்கவா எனும் புகழ்பெற்ற உயிரியல் விஞ்ஞானியிடம் கோல்வால்க்கர், "எப்படி மாமிசமும், பாலும் உற்பத்தி ஆகின்றன?" என்று கேட்க, "இரண்டும் ஒரே இடத்தில் இருந்துதான், ஒரே முறையிலேயே உற்பத்தி ஆகின்றன." என்று பார்கவா சொல்ல, "பிறகு மாமிசத்தைப் புசிக்கிற நீங்கள் ஏன் பாலை மட்டும் சாப்பிடக்கூடாது?" என்று கோல்வால்க்கர் கேட்க, பார்கவா சூடு குறையாமல், "பாலை மட்டும் அருந்தும் நீங்கள் ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது?" என்று திருப்பிக்கேட்டார். வர்கீஸ் குரியனின் எதிர்ப்பு வேறு வகையானதாக இருந்தது. நோயுற்ற பசுக்களை, வயதாகிப் போன மாடுகளைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகம் என்பதால் அவற்றைக் கொல்வதற்குத் தேவை உண்டு என்று அவர் கருதினார். கோல்வால்க்கர் அவரிடம், "குரியன் நான் பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பசுவதைக்கு எதிராகப் பெற களமிறங்கிய பொழுது ஒரு பெண் சுடும் வெய்யிலில் வீடு வீடாகச் சென்று அதற்காக உழைப்பதை பார்த்தேன். இந்த நாட்டைக் கலாசார ரீதியாக இணைக்க இதுவே ஆயுதம் என்று புரிந்தது. பசுவதையை அமல்படுத்தி எனக்கு வெறும் ஐந்து வருடங்கள் கொடுங்கள். நான் நாட்டையே ஒற்றுமைப்படுத்திக் காண்பிக்கிறேன்." என்று படுத்தி எடுத்தார். குரியன் அசையவேயில்லை. (எனக்கும் ஒரு கனவு இருக்கிறது-குரியனின் சுயசரிதை) மொரார்ஜி தேசாய் ஆட்சிக்கு வந்ததும் அந்தக் கமிட்டியை சத்தமேயில்லாமல் கலைத்து விட்டார். 

பசுக்களைக் கொல்லும் வயதை இருபத்தி ஐந்து என்று சில அரசுகள் ஏற்றி சட்டமியற்றிய பொழுது, பதினைந்து வயதோடு ஒரு மாட்டின் பயன்பாடு நின்றுவிடும்பொழுது இப்படிச் சட்டம் போடுவது முழுத்தடைக்குச் சமமானது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. ஆனால், மிர்சாபூர் மோட்டி குரேஷி கசாப் வழக்கில், (2005) நவீன தொழில்நுட்பம் பசுக்களின் வயதை அதிகப்படுத்தி விட்டது என்றும், பசு பால் கொடுப்பது நின்று போனாலும் அதன் சாணம், கோமியம் கோஹினூர் வைரத்தைப் போல விலை மதிக்க முடியாதது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லகோட்டி அடங்கிய பெஞ்ச் கருத்து தெரிவித்தது. குஜராத் அரசு கொண்டு வந்த தடைச்சட்டத்தை முழுமையாகச் செல்லும் என்று அத்தீர்ப்பு அறிவித்தது. ஹின்சா விரோதக் வழக்கில், சமண விழாக்களின் பொழுது மாடுகளை வெட்டும் கூடங்களை மூடியது சரியென்ற உச்சநீதிமன்றம், முழுமையான பசுவதைத்தடை என்பது சட்டரீதியாகத் தேவையற்றதும், விரும்பத்தக்கதும் இல்லை என்றுவிட்டது. இந்தியா முழுக்கப் பசுவதையை வெவ்வேறு வகைகளில் இருபத்தி நான்கு மாநிலங்கள் தடை செய்திருக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (சட்டப்பிரிவு 48)-ல் அதற்கு இடம் இருக்கிறது. மிகக்கடுமையாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்கள் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான். ராஜஸ்தானில் ஈகைத்திருநாள் அன்று இஸ்லாமியர்கள் வெட்டி உண்ணும் ஒட்டகத்தைப் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவித்துப் பிஜேபியின் வசுந்தரா ராஜே அரசு சட்டம் இயற்றியது. 

மத்தியபிரதேச அரசு, 2012-ல் பசுவைக் கொன்றால் மூன்று முதல் ஏழு வருட சிறைத்தண்டனை என்று சட்டம் கொண்டுவந்தது. தான் நிரபராதி என்று நிரூபிக்கும் பொறுப்பும் குற்றஞ்சாட்டப்பட்டவர் வசமே என்றது அச்சட்டம். ஹெட் கான்ஸ்டபிள் அளவில் துவங்கி ஆயுதம் ஏந்தி சோதனை செய்யும் உரிமையையும் அந்தச் சட்டம் வழங்கியது. 264.6 பில்லியன் ரூபாய் மதிப்புக் கொண்ட துறையாகத் திகழும் பீப் ஏற்றுமதியை மதச்சாயம் பூசி காலி செய்யக் கிளம்பி இருக்கிறார்கள். உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாமிச உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும். தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் குடும்பங்கள் பெரிய அளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அவர்களுக்குப் புரதத்தை அதிகளவில் வழங்குவது பீப் தான். எழுபது சதவிகித புரத ஆற்றல் தலித் பிள்ளைகளுக்குப் பீப் மூலமே கிடைக்கிறது. மட்டனின் விலையில் மூன்றில் ஒரு பங்கே இருக்கும் பீப் இனிமேல் மகாராஷ்ட்ரா ஒடுக்கப்பட்ட இன பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், பசுவதை மட்டுமே தடை செய்யப்பட்டு எருமைகள், பிற மாட்டினங்களைக் கொல்லலாம் என்கிற சூழல் இருந்தது. இதற்குத்தான் தற்போது மகாராஷ்ட்ரா அரசு தடை போட்டுள்ளது. 

எருமை துவங்கி எந்த மாட்டு இனத்தையும் கொல்லவேக்கூடாது என்று அரசு இயற்றியிருக்கும் சட்டம், ஐந்து வருட சிறைத்தண்டனையை வழங்குகிறது. எருமையும், பசுவும் வெவ்வேறு வகையான உயிரினங்கள், அவை இரண்டும் கூடுவதுமில்லை என்று விலங்கியல் நிபுணர்கள் காட்டுக்கத்து கத்தினாலும் இவர்கள் கேட்கத் தயாராக இல்லை. சுற்றுலாத்துறை பெருமளவில் இதனால் பாதிக்கப்படும். பீப்பும், பீரும் செமையான காம்பினேஷனாக இருக்கும் சூழலில் இந்தச் சட்டம் அதற்கு ஆப்பு வைத்துள்ளது. வெளிநாட்டவர்கள் இந்தியாவின் முக்கியச் சுற்றுலாத்தலமான மும்பைக்கு வர இனிமேல் யோசிப்பார்கள். பெரிய அளவில் கறி ஏற்றுமதியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த குரேஷி (இஸ்லாமிய சமூகத்து வியாபாரிகள்) இதனால் பாதிக்கப்படுவார்கள். பலர் வேலை இழப்பதும் நடக்கவிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே தன்னுடைய உணவுத்தேர்வுகள், மத நம்பிக்கைகள், சொந்த விருப்பங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் இந்த வதைச்சட்டங்கள் மனிதர்களையே வதைக்கின்றன!
                     நன்றி :- விகடன் செய்திகள் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...