Monday, March 23, 2015

இன்று பகத் சிங் நினைவு நாள்


பகத் சிங்கின் கடைசி விருப்பம்
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு.பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது.பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.இன்று அது உண்மையாகி விட்டது .
                  பகத் சிங் நாமம் வாழ்க !
                  நன்றி :- தி ஹிந்து 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...