இந்திய நாட்டின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய உழவர்களில் 52 சதவீதம் பேர் கடனில் தவிக்கின்றனர். அவர்களுடைய சராசரி கடன் குடும்பத்துக்கு ரூ. 47,000 அளவுக்கு இருப்பதாகவும், அவர்களுக்குச் சாகுபடி மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ. 36,972 மட்டுமே என்றும் கூறுகிறது.இந்த அறிக்கையின் பொதுவான கருத்தை ஏற்றுக்கொண்டாலும், கடன் பெற்றுள்ள உழவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளதாக வேளாண்மைப் பொருளியல் வல்லுநரான தேவிந்தர் சர்மா கூறுகிறார்.ஏறத்தாழ 80 சதவீதம் குடும்பங்கள் கடன் வலையில் சிக்கி இருப்பதாகக் கணக்கீடுகள் கூறுகின்றன. என்னுடைய தனிப்பட்ட களப் பயணங்களின்போது கண்ட உண்மை என்னவென்றால் 100 சதவீதம் உழவர்கள், குறிப்பாக வேளாண்மையை மட்டுமே நம்பியுள்ள உழவர்கள் கடனில் இருப்பதைக் காண முடிந்தது.இன்னும் சொல்லப்போனால் பசுமைப் புரட்சியில் ஈடுபட்ட இந்திய உழவர்கள் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலேயே செத்தும் போகின்றனர்.கடன் மட்டுமே மிச்சம்.ஆந்திர உழவர்களில் 92% குடும்பங்களும் அடுத்துத் தமிழகத்தில் 82.5% வேளாண்மைக் குடும்பங்களும் கடன்பட்டுள்ளன. இந்தக் கடன் கணக்கில் நிறுவன ரீதியான கடன்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, வங்கிகள் போன்றவற்றில் கடன் பெற்றவர்கள் மட்டுமே வெளியே தெரிய வருகின்றனர்.இவர்கள் பெரும்பாலும் பெரிய, செல்வாக்குள்ள பண்ணையாளர்கள். சிறு குறு நிலவுடைமையாளர்கள், குறிப்பாக மானாவாரி வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் கணக்கிலேயே வருவதில்லை.இவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ள விளிம்புநிலை மக்கள். பொருள்களைக் கைமாற்றித் தரும் தரகு மண்டிகளிலும், ரசாயன - உரப் பூச்சிக்கொல்லிக் கடைக்காரர்களிடமும், இன்னும் பலர் கந்துவட்டிக்காரர்களிடம்தான் இவர்கள் பொதுவாகக் கடன் வாங்குகின்றனர். முதலில் கூறிய பெரிய உழவர்களின் கடன் பெரிதும் வாராக்கடன்களாக இருக்கின்றன, அல்லது தள்ளுபடி செய்யப்படுகின்றன.விவசாயம் வேண்டாம்.கார்ப்பரேட் பெருங்குழு மக்களுக்குச் செய்யும் தள்ளுபடியைக் காட்டிலும், இது ஒன்றும் பெரியது அல்ல என்றாலும், சிறு-குறு உழவர்களின் நிலை மிகவும் கொடுமையானதாக உள்ளது. ஆகவே, இவர்கள் எப்படியாவது வேளாண்மையைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தவிக்கின்றனர். இவர்களுக்கு இதைத் தவிர வேறு தொழில் செய்யும் திறனோ, தேவைப்பட்டால் மற்றவர்களை எளிதில் ஏமாற்றி வேறு தொழில் செய்யும் சாதுரியமோ இல்லாத காரணத்தால் வேளாண்மையில் உழன்றுகொண்டு இருக்கின்றனர்.இதையும் மாதிரிக் கணக்கெடுப்புக் குறிப்பில் குறிப்பிடுகின்றனர். அதாவது 37 சதவீதம் மக்கள் வேளாண்மையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளதாக அது தெரிவிக்கிறது.கைகழுவும் அரசு
அது மட்டுமல்ல. நேரடியாக உழைக்கும் உழவர்களை வெளியேற்றிவிட்டு அல்லது அவர்களாகவே வெளியேறச் செய்துவிட்டுப் பெருங்குழுமக் கும்பணி வேளாண்மையை ஊக்குவிக்கும்விதமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதாவது வேளாண்மைத்துறையில் இந்தியப் பொதுத் துறையின், அரசுத் துறையின் முதலீடு கடுமையாகக் குறைக்கப்பட்டுவருகிறது.அதேநேரம் பெரும் குழும நிறுவனங்களின் முதலீடு அசுர வேகத்தில் அதிகரித்துவருகிறது. 1980-களில் பொதுத்துறை முதலீடு ரூ. 13,174 கோடி. அதுவே தனியார் துறை முதலீடு ரூ. 15,384 கோடி. 2008-9-ம் ஆண்டளவில் பொதுத்துறை முதலீடு ரூ. 24,452 கோடி, தனியார் துறை முதலீடு ரூ. 1,14,145 கோடி. அதாவது கூட்டிக் கழித்துப் பார்த்தால் தனியார் துறை முதலீடு 2.5%-ல் இருந்து 52% ஆக உயர்ந்துள்ளது.அதாவது பெரும்குழும நிறுவனங்களின் கைகளில் வேளாண் துறை போய்விட்டது தெரிகிறது. அத்துடன் அரசின் பாதுகாப்பு அல்லது பங்களிப்பு மிகவும் குறைவதைக் காண முடிகிறது. நிதி ஒதுக்கீடுகள் மற்றத் துறைகளைவிட மிக மோசமாகக் குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட வேளாண் துறைக்குக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தேவிந்தர் சர்மா குறிப்பிடுகிறார்.மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 34,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; வேளாண்மைக்கு ரூ. 31,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர். 1950-களில் இந்தியா ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை 55.6 சதவீதம். அதுவே 2009-ம் ஆண்டளவில் 15.7 சதவீதம். அப்படியானால் இந்திய வேளாண்மையைக் காப்பாற்றப்போவது யார்?
நன்றி :- தி ஹிந்து
No comments:
Post a Comment