Tuesday, December 9, 2014

சர்ச்சை பேச்சுகள்.. நாடும் தாங்காது...நாட்டு மக்களும் தாங்கமாட்டார்கள்!

நாடாளுமன்றம் ஒரே அமளி துமளிக் காடாக இருக்கிறது.. காரணம் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசிய, டெல்லியில் நீங்கள் அமைய விரும்புவது ராமனின் வழி வந்தவர்களின் அரசா அல்லது முறையற்ற வழி வந்தவர்களின் அரசா? எது வேண்டும் உங்களுக்கு?" என்ற சர்ச்சைப் பேச்சுதான்.. இந்த அமளி இன்று 2வது வாரத்தையும் தொட்டிருக்கிறது. இவை ஓய்வதற்கு உள்ளாகவே இன்று இரண்டு கருத்துகள் சர்ச்சையாக வெடித்திருக்கின்றன ஒன்று "பகவத் கீதையை" தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது..மற்றொன்று, "தாஜ்மஹால் இருக்கும் இடத்தில், பழமையான இந்து கோயில் இருந்தது" என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் பேசியிருப்பது... இந்த இரண்டு கருத்துகளே கண்டனத்துக்கு உரியதுதான். முதலில் சுஷ்மாவின் பகவத் கீதை கருத்தை பார்ப்போம். இந்தியா என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இந்த நாட்டின் அரசாங்க நிர்வாக அமைப்புகளில் எந்த ஒரு மதச்சார்பு தன்மையும் இருக்கக் கூடாது என்பதைத்தான் "செக்குலரிசம்" என சுட்டிக்காட்டுகிறது இந்திய அரசியல் சாசனம். இதனை வலியுறுத்தும் வகையில் எத்தனையோ நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. "அரசுக்கு மதம் என்பது கிடையாது" என்று 2012ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ நெத்தியடித் தீர்ப்பளித்திருக்கிறார். இந்த நிலையில் மத்திய அமைச்சராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் "பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று பேசியிருப்பது பொறுப்பற்ற பேச்சு. உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிற திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று 1995ம் ஆண்டே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திருக்குறள் இந்துக்களுக்கு மட்டுமான ஒரு நூல் அல்ல.. அனைத்து "மனிதர்களுக்கானமான" வாழ்வியல் செம்மை வழிகளை விளக்குகிற ஒரு நூல். அதனை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கலாமே தவிர "இந்துக்களின்" புனித நூலான பகவத் கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு சுஷ்மா ஸ்வராஜ் பேசக் கூடாது.. வேண்டுமெனில் சுஷ்மா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் சார்ந்திருக்கும் சங்கபரிவாரங்களின் பிரதிநிதியாக இருந்து பேசலாம்.. அது சர்ச்சையாக இருக்காதே என்பதுதான் பொதுவான கருத்து. அடுத்தது தாஜ்மஹால் இருந்த இடத்தில் கோயில் இருந்தது என்கிற பூகம்பத்தை உருவாக்கும் பேச்சு... இந்தியாவில் "தீவிரவாதம்" "பயங்கரவாதம்" "குண்டுவெடிப்புகள்" என பல்வேறு துயரம் தோய்ந்த அத்தியாயங்களும் "பாபர் மசூதி" இடிக்கப்பட்டதற்கான எதிர்வினையில் பிறந்தவை என்ற வரலாற்றை மறந்துவிடக் கூடாது.. இந்த ரணங்கள் இன்னமும் ஆறவில்லை.. அத்தியாயங்கள் முடிவுக்கும் வரவில்லை. அதற்குள் தாஜ்மஹாலுக்கும் சங்க பரிவாரங்கள் குறி வைத்துவிட்டனவோ என்ற அச்சம் எழுகிறது. பாபர் மசூதியை இடித்து 'கட்டிட ருசி' கண்ட "கரசேவை" பூனைகள் தாஜ்மஹால் மீது பாய முடிவு செய்தால் நாட்டின் இதர பகுதி பிற மதத்து ஆலயங்களுக்கும் நினைவகங்களுக்கும் அவர்களது வாழும் உரிமைக்கும் நேரப் போகும் கதியை நினைத்தாலே குலை நடுங்கவே செய்கிறது.. இதையெல்லாம் செய்யத்தான் ஆட்சியையே கைப்பற்றினோம்.. வளர்ச்சி, மாற்றம் என்பதெல்லாம் மக்கள் முகத்தில் கரியைப் பூச பேசப்பட்ட பேச்சு என்ற நிலை நீடித்தால் நிச்சயமாக நாடு தாங்காது!!
<நன்றி :- ஒன்  இந்தியா செய்திகள்> 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...