Thursday, December 11, 2014

இது மூடுவிழா காலம்: நேற்று நோக்கியா... இன்று ஃபாக்ஸ்கான்!


ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலம் மூடப்பட்டது. இதனால், 8,000த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வீதிக்கு வந்தனர்.8 ஆண்டு காலம் செல்போன் தொழிற்சாலையில் கடும் உழைப்பை கொடுத்து பணிபுரிந்து, அதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரம், 6 ஆயிரம் என்ற சொற்ப சம்பளம் வாங்கிய அவர்களுக்கு இப்போது அந்த வேலையும் இல்லை. இந்த 8 ஆண்டு கால அனுபவம் இன்னொரு வேலையை பெறுவதற்கும் உதவாது. 30ஐ ஒட்டிய வயதில் வேலையை இழந்து நிற்கும் அவர்கள், மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து வாழ்வை துவங்க வேண்டும். ஆனால், இந்த அவலம் நோக்கியாவுடன் முடிந்துவிடவில்லை என்பதுதான் இப்போது நம் முன்பு உள்ள அபாயம்.



ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனமும் தனது உற்பத்தியை நிறுத்தப்போகிறது. ஆர்டர் குறைந்துவிட்டதால் டிசம்பர் 3வது வாரத்தில் தனது உற்பத்தியை படிப்படியாக நிறுத்திக்கொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பொருளாதார மதிப்பில் சுமார் 850 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஃபாக்ஸ்கான் திரும்பப் பெறப்போகிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளருக்கு ஃபாக்ஸ்கான் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும், அதில் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து படிப்படியாக உற்பத்தி குறைத்துக்கொள்ளப்பட இருப்பது குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஃபாக்ஸ்கான் என்பது செல்போனுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். இதன் முக்கிய வாடிக்கையாளர்களில் நோக்கியா நிறுவனமும் ஒன்று. 2005ல் நோக்கியாவின் உற்பத்திப் பிரிவு ஸ்ரீபெரும்புதூரில் துவங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2006ல் ஃபாக்ஸ்கானும் இங்கு வந்தது. நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒன்றும், வெளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றுமாக இரண்டு ஃபாக்ஸ்கான் யூனிட்டுகள் திறக்கப்பட்டன. உச்சகட்ட உற்பத்தித் திறனைக் கொண்டிருந்த நேரத்தில் ஃபாக்ஸ்கானின் ஒரே யூனிட்டில் மட்டும் 6,800 நேரடித் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். இப்போது 1,306 நேரடித் தொழிலாளர்களும், 189 தொழில்நுட்ப பணியாளர்களும் பணிபுரியும் நிலையில் அனைவரும் வேலை இழப்பை எதிர்நோக்கி உள்ளனர்.இப்போது மூடப்பட இருப்பது நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருக்கும் யூனிட்தான். சென்னை-பெங்களூரு சாலையில் இருந்த ஃபாக்ஸ்கானின் மற்றொரு யூனிட், நோக்கியா நிறுவனம் தனது ஆர்டர்களை குறைத்துக்கொள்ள துவங்கியபோதே மூடப்பட்டுவிட்டது.

நோக்கியா மூடப்பட்டபோதே அடுத்தது ஃபாக்ஸ்கான்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியாவை நம்பியேதான் இங்கு தொழிற்சாலையைத் திறந்தது.நோக்கியா, ஃபாக்ஸ்கான் என்று தொடரும் இந்த மூடுவிழாவில் அடுத்து எந்த நிறுவனம் என்று தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அரசின் நிதியை ஊதாரித்தனமாக செலவழித்து ஊட்டி வளர்க்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இவற்றினால் நஷ்டம் மட்டுமேதான் ஏற்படுகிறது என்பதை மத்திய கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையும் எடுத்துக் காட்டியுள்ளது.அடுத்தடுத்து நிறுவனங்கள் மூடப்படும்போது வேலை இழக்கும் தொழிலாளர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.
 நன்றி :-விகடன் செய்திகள் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...