Monday, December 15, 2014

புதையும் அமெரிக்கப் பொருளாதாரம்


வட்டி வீதம் உயர்த்தப்படவில்லை எனில், பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தனது செயல்களால் அடிஆழத்துக்கே சென்றது. அரசின் பணத்துக் கான வட்டியையும், வாடிக்கையாளர்களுக்குத் தரும் கடனுக்கான வட்டியையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டேவந்தது. நிதி நெருக்கடியிலிருந்து மீளவும், பொருளாதார மந்தநிலையைத் தாண்டிச் செல்லவும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று காரணம் காட்டி இதைச் செய்தது. ஒருகட்டத்தில், மேற்கொண்டு வட்டி வீதத்தைக் குறைக்க முடியாமல் நிறுத்திவிட்டது. பூஜ்யத்துக்குப் பிறகு வட்டியை எப்படிக் குறைப்பது? 16.12.2008 முதல் 0% முதல் 0.25% ஆக நிர்ணயிக்கப்பட்ட வட்டி வீதம் இன்றளவும் அப்படியே தொடர்கிறது.
கடந்த 6 ஆண்டுகளாக நாம் இதே நிலையில் வட்டி வீதத்தைப் பராமரித்துவருகிறோம். உலகப் பொருளா தாரத்தின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளாமல் இப்படிச் செயல்படுகிறோமே என்று வருத்தமாக இருக் கிறது. பொருளாதார நடவடிக்கைகள் வேகம் இழந்து மந்தகதிக்கு வந்து, அசைவற்று நின்றுவிட்டால் ‘எல்லாமே மாறிவிடுகிறது’.ஆனால், அரசின் கொள்கைகளை வகுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த உண்மையை நம்புவதே இல்லை.பொருளாதாரம் ஆழத்துக்குப் போய்விட்டால், பொருளாதாரக் கொள்கையின் எந்த விதியையும் கடைப் பிடித்துப் பயனில்லை. அரசு செலவுசெய்வது என்பது, தனியாரின் முதலீட்டோடு போட்டி போடுவதற்காக அல்ல; தொழில், வர்த்தகத் துறையும் அதிக செலவு செய்வதை ஊக்குவிப்பதற்காகத்தான். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும் ஃபெடரல் வங்கியாளர்கள், அதற்கு நேர்மாறான நடவடிக்கைகளைத்தான் இப்போது எடுக்க வேண்டும். ‘விலைவாசி மேலும் உயர்வதை நாங்கள் ஆதரிப்போம்’ என்ற நம்பிக்கையைச் சந்தைக்கும் முதலீட்டாளர்களுக்கும் அவர்கள் ஊட்ட வேண்டும் (விலை உயரும், லாபம் கிடைக்கும் என்றால்தான் நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடும்).
கட்டமைப்புச் சீர்திருத்தம்
பொருளாதாரக் கட்டமைப்பில் சீர்திருத்தம் என்று இவர்கள் கூறுவது ஊதியத்தை வெட்டுவதைத்தான். இதனால், வேலைவாய்ப்பு பெருகாது, குறையத்தான் செய்யும். இதையெல்லாம் படிக்கும்போது உங்களுக்குப் பிதற்றலாகத் தோன்றும். உண்மையில் அப்படியல்ல. வட்டி வீதம் பூஜ்யமாகக் குறைந்துவிட்டால், இப்படித்தான் நடக்கும் என்று பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, வரலாறும் இதைத்தான் உணர்த்துகிறது. ஜப்பானில் பொருளாதாரப் பூரிப்புக்குப் பிறகு நடந்த வற்றையும், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு 1930-ல் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியையும் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தினால், 2008 முதல் அமெரிக்கா எத்தனை தவறான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்பது புரியும்.
குடிகாரர் பிடித்த தெருவிளக்கு
ஏற்கெனவே சொன்னபடி, நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். பெரும்பாலான கொள்கை வகுப் பாளர்களும், மிகத் தீவிரமான சிந்தனை உள்ளவர்களும் பொருளாதாரத்தைக் கவனமாக ஆராயாமல் தங்களுடைய அறிவு, அனுபவம் ஆகியவற்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஒருவித முரட்டுத் துணிச்சலோடு முடிவுகளை எடுப்பார்கள். அவர்களுடைய நிலையை, சில பொருளாதார அறிஞர்களும் ஆதரிப்பார்கள். இந்த அறிஞர்களுடைய செயல் எப்படிப்பட்டது என்றால், குடிபோதை தலைக்கேறிய ஒருவர், தெருவிளக்கின் வெளிச்சத்துக்காக அல்லாமல் கீழே விழுந்துவிடாமலிருக்க அதைப் பிடித்துக்கொண்டிருப்பதைப் போன்ற செயலாகும். பார்ப்பதற்குத் துணிச்சல்காரர்களைப் போலத் தோன்றினாலும் உள்ளூர அச்சமடைந்தே இவர்கள் வட்டி வீதத்தைக் குறைவாகப் பராமரிக்கிறார்கள். ‘விலைவாசி உயர்ந்தால் மக்களுடைய வாழ்க்கைத் தரம் சரிந்துவிடும். கூப்பாடு போடுவார்கள். எனவே, வட்டியை உயர்த்தாதே!’ என்று தங்களுக்குள் சொல்லிக்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் இப்படித்தான் தவறான முடிவுகளையே தொடர்ந்து எடுத்துவருகிறார்கள்.பட்ஜெட் பற்றாக்குறைதான் நம்முடைய தலையாயப் பொருளாதாரப் பிரச்சினை என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் செலவைக் குறைத்துச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், பொருளாதார வீழ்ச்சி கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது முட்டாள்தனமான கொள்கை. அரசு தன்னுடைய செலவுகளைக் குறைத்துக்கொள்வதால், லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு
குறைந்துவிடுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதுடன், பொருளாதாரச் சுழற்சியும் கட்டுப்படுத்தப் படுகிறது. பணம் சுழலாவிட்டால் எல்லாத் துறைகளும் முடங்கிவிடுகின்றன. வேலைவாய்ப்பும் குறைந்து, ஊதியமும் குறைந்து, வர்த்தகச் சந்தைகளும் வியாபாரத்தை இழப்பதால் பொருளாதாரத்தின் அடித்தளம் வெகுவாகச் சேதப்படுகிறது.
செய்துகாட்டிய ஐரோப்பிய வங்கி
அரசாங்கம் கரன்ஸி நோட்டை அச்சடித்துக்கொண்டே இருந்தால், பணத்தின் மதிப்பு குறைந்துவிடும்; பணவீக்கம் அதிகரித்துவிடும் என்று நம்மிடம் தொடர்ந்து கூறுகிறார்கள். ஆனால், பிற நாடுகளின் மத்திய வங்கிகள் இப்படிச் சிந்திப்பதில்லை. ஐரோப்பிய மத்திய வங்கியைப் பாருங்கள், 2011-ல் வட்டி வீதங்களை உயர்த்தியது. மக்கள் தங்களுடைய சேமிப்பை வங்கிகளில் செலுத்தினார்கள். அரசு அந்தப் பணத்தைத் தொழில், வியாபாரம் செய்ய முற்படுபவர்களுக்குக் கொடுத்தது. அதைக் கொண்டு அவர்கள் வேலையைத் தொடங்கினார்கள். இதனால் வேலை வாய்ப்பு அதிகரித்தது. கூடவே, நுகர்வும் அதிகரித்தது. ஐரோப்பாவில் இப்போது பணவீக்க வீதம் 2%-க்கும் குறைவாகவே இருக்கிறது. சிலர் எச்சரித்ததற்கு மாறாக, உற்பத்தி பெருகியதால் சில பண்டங்களின் விலைகூடக் குறைந்துவருகிறது.
பொருளாதாரம் மீண்டுவிட்டதா?
ஃபெடரல் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் நிமிர்ந்துவிட்டதா? ஒரு விஷயத்தைக் குறிப்பிடலாம். வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மைதான். புதிய ஆண்டு பிறந்த பிறகு (2015) சில மாதங்களுக்குப் பிறகே அரசு வட்டியை உயர்த்த அனுமதிக்கும் என்று சில பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போது விலைவாசி உயர்வு குறைவாக இருக்கிறது, ஊதியம் மிகமிகக் குறைவாக இருக்கிறது. வட்டியை உடனே உயர்த்தினால், நிலைமை மோசமாகிவிடும் என்று ஃபெடரல் வங்கி நினைக்கிறது. ஐரோப்பாவோ பொருளாதாரச் சுணக்கத்திலிருந்து விடுபட்டு பாய்ச்சலுக்குத் தயாராகிவருகிறது.
ஜப்பானுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். விலை வாசியின் வீழ்ச்சியிலிருந்து விடுபட முடியாமல் ஜப்பான் தவிக்கிறது. சீனாவோ 1980-களின் பிற்பகுதியில் ஜப்பான் சிக்கிய அதே பொருளாதாரச் சிக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அந்நாட்டின் பொருளாதாரமும் அடி மட்டத்தைத் தொடும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது.பூஜ்ய வட்டி வீதத்தால் நன்மையை விடத் தீமையே அதிகம் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் விரைவாக உணர்வது நல்லது. ஆனால், பெரும்பாலானவர்கள் உணர்வதும் இல்லை, இனி உணர்வார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. பொருளாதார நிபுணர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது இருக்கட்டும், தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதையே ஒப்புக்கொள்ளக்கூடப் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் தயாராக இல்லை. அயன் ராண்ட் நாவலில் சித்தரிக்கப்பட்ட நிலையிலேயே நாம் வாழ்கிறோம் என்றுதான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்புகிறார்கள்.இந்த நிலை எதிர்காலத்துக்கு நல்லதல்ல. பொருளா தாரத்தைப் பற்றிச் சரியாகக் கணிக்கவில்லை என்பதை உணராமல், சரியாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் நம்புவதுதான் பேராபத்து. இது நிச்சயம் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.
                      நன்றி :- தி ஹிந்து 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...