பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சியில் கூடுதல் மாணவர்களை சேர்க்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.அரசின் தொலைபேசி நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மதுரை வட்ட அலுவலகம், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்பிளாண்ட் எனப்படும் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் நெட்வொர்க் பேசிக், ஆரக்கிள் போன்ற கணினி தொடர்பான பாட வகுப்புகளை நடத்தி வருகிறது.இதில் புதிதாக இந்த ஆண்டு, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பிரத்யேகமாக சில்வர், கோல்டு, பிளாட்டினம் என 3 விதமான சான்றிதழ் பயிற்சிகளை தொடங்கியது.சுவிட்சிங், டிரான்ஸ்மிஷன், இன்பிராஸ்டிரக்சர் (கட்டமைப்பு) ஆகியவற்றில் பயிற்சி அளித்து சில்வர் சான்றும் பிராட்பேண்ட் மற்றும் ஆப்டிகல் பைபர் (செயற்கை இழை) தொடர்பான பயிற்சி அளித்து கோல்டு சான்றும், ஜிஎஸ்எம், மொபைல்டெக்னாலஜி ஆகியவை தொடர்பாக பயிற்சி அளித்து பிளாட்டினம் சான்றிதழையும் வழங்குகிறது.அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பிஎஸ்என்எல் முகாமுக்கு அனுப்பப்படுகின்றனர். மாணவர்களின் வசதிக்கேற்ப பயிற்சி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 8 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 295 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தல்லாகுளம் மற்றும் எல்லிஸ்நகரில் உள்ள மையங்களில் நேரடியாக தொழில்நுட்ப முறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இதில் கூடுதல் மாணவர்களை சேர்க்க பிஎஸ்என்எல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சில் பிஎஸ்என்எல்-க்கு வழங்குகிறது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயன்பெறுவதாக இருப்பதால் இதில் மேலும் கூடுதல் மாணவர்களைச் சேர்த்து பயிற்சி அளிக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், பயிற்சிக்கான கட்டணத்தை கல்லூரி மாணவர்களே செலுத்த வேண்டியிருக்கும். மேலும் அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சில் சான்றிதழ் வழங்குவதற்கு பதில் பிஎஸ்என்எல் சான்றிதழ்களை வழங்கும். வேலைவாய்ப்புக்கு இந்த சான்று உதவும் என்பதால் கூடுதல் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
நன்றி :-தினமணி
No comments:
Post a Comment