தொலைதொடர்புத்துறை நிறுவனத்தை மத்திய அரசும், தொலைத் தொடர்புத்துறை அமைச்சகமும் நிதி நெருக்கடியில் தள்ளுவதாக அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு கடலூரில் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்றது. சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை சமர்ப்பித்தார். சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.வேணுகோபால்,பிஎஸ்என்எல் நிறுவன முதன்மைப் பொதுமேலாளர் அஷ்ரப்கான், கடலூர் பொதுமேலாளர் லியோஆண்டனி மார்ஷல் ஆகியோர் பேசினர். வரவேற்புக்குழு செயலாளர் பி. வெங்கடேசன் நன்றி கூறினார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும், தொலை தொடர்புத் துறை பிஎஸ்என்எல்-க்கு தருவதாக ஒத்துக் கொண்ட ரூ. 6700 கோடியை தராமல் தாமதிப்பதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. ஸ்பெக்ட்ரம் கட்டணமாக பிஎஸ்என்எல் இடமிருந்து வசூலித்த ரூ.18500 கோடி முறையற்றது என்பதைச் சுட்டிக் காட்டிய பின்பும், திருப்பித் தராமல் வஞ்சிக்கும் போக்கு தொடர்கிறது. பிஎஸ்என்எல் பொதுத் துறையாகவே நீடிக்க, மக்கள் சொத்தாக தொடர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரைவழி இணைப்புகளை கொடுப்பதற்கு வாய்ப்பிருந்தும், தேவையான கருவிகளையும், உபகரணங்களையும், வாங்குவதில் தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பொது மக்களுக்கு சிறந்த சேவையை தரும் வகையில் போதுமான கேபிள், மோடம் மற்றும் வயர்களை தில்லி பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment