Wednesday, March 6, 2013

இதய அஞ்சலி


புரட்சிகர தலைவன் ஹியூகோ சாவேஸ்க்கு BSNLEU சங்கத்தின் இதய அஞ்சலி 

          மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.

          வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ் தனது 58வது வயதில் செவ்வாய்க் கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.25 மணிக்கு தலைநகர் கேரகாஸில் உயிரிழந்தார்.  சாவேஸ் 1998ம் ஆண்டு முதல் தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் வெனிசுவேலாவின் அதிபராக 14 ஆண்டுகளாக பணியாற்றினார். முன்னாள் இராணுவ அதிகாரியான சாவேஸ் 1998ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு அதிபரானார்.  அன்று முதல் எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் 4வது இடத்தில் இருக்கும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மக்கள் நலத்துக்கு பயன்படுத்தும் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தினார். 1998ல் புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்த வழி வகுத்தார்.

          பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிக ராயல்டி வசூலித்து அதன் மூலம் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவு வழங்கும் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதிகள், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கு ஓய்வூதியம் போன்றவற்றை செயல்படுத்தினார். குழந்தை பேறின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குழந்தைகளிடையே ஊட்டச் சத்துக் குறைவும் பெருமளவு குறைந்தன.19ம் நூற்றாண்டின் வெனிசுவேலா சுதந்திர போராட்ட வீரர் சைமன் பொலிவாரின் நினைவாக பொலிவாரிய புரட்சி என்று அழைக்கப்படும் சாவேஸின் சீர்திருத்தங்களை பன்னாட்டு பெருநிறுவனங்களும், அவர்கள் சார்பான ஊடகங்களும், கலகக் காரர்களும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். 2002ல் இராணுவ கலகம், 2007ல் நிலச் சீர்திருத்தங்களுக்கான கருத்துக் கணிப்பில் தோல்வி, தொடர்ச்சியான எதிர் பிரச்சாரம் என்று பல வகையான தாக்குதல்களை மக்கள் துணையுடன் முறியடித்தார் ஹியூகோ சாவேஸ்.

          அமெரிக்க ஏகாதிபத்திய விரிவாக்கத்தை முறியடிப்பதற்கு தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில் சாவேஸ் முன்னணி வகித்தார்.  உலகின் பிற பகுதிகளில் அமெரிக்காவால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதை தனது வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு அம்சமாக வைத்திருந்தார்.ஜூன் 2011ல் சாவேஸூக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  2012 அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் 54 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

          மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கின.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...