மனித உரிமைகள் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலைக்கு நமது காவல்துறை வந்து விட்டது. உலகம் கொலைகளுக்குப் பழகி விட்டது. ஒன்று இரண்டு பேர் இறந்தாலே பதறிய காலம் போய், இருபது முப்பது பேர் இறந்தாலும் கூட, சில பல ஸ்டேட்டஸ்களோடு முடிந்து போகும் டிஜிட்டல் யுகம் இது.ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் வைத்து 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் ஆந்திர வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘’200 பேர் சேஷாசலம் பகுதிக்கு செம்மரங்களை வெட்ட வந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவர்களை சுற்றி வளைத்து சரணடையச் சொன்னோம். ஆனால் அவர்கள் எங்கள் மீது கற்களைக் கொண்டு தாக்கியதால் சுட்டுக் கொன்றோம்” என்றது ஆந்திர வனத்துறை.
சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்தில் கொல்லப்பட்டவர்கள் 12 பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றனர். பிறகு 20 பேருமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றனர். எது எப்படி என்றாலும் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே வேலூர், திருவண்ணாமலையை ஒட்டிய ஜவ்வாது மலையின் பழங்குடி மக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இந்தப் பழங்குடிகளுக்கு காடுகளைத் தவிற வேறு எதுவும் தெரியாது. தமிழகத்திலும், கேரளத்தின் வயநாடு மலைப்பகுதிகளிலும் வாழும் இவர்கள் காடுகளில் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட மக்கள். இப்போது கொல்லப்பட்டிருப்பதும் அவர்கள்தான். மரம் வெட்டச் சென்றால் கிடைக்கும் சில ஆயிரம் ரூபாய் கூலிக்காக இந்த மக்கள் பலியிடப்படுகிறார்கள். செம்மர கடத்தல் கும்பல்கள் இந்த மக்களிடம் செம்மரங்களை வெட்டத்தான் உங்களை அழைத்துச் செல்கிறோம் என்பதை சொல்வதில்லை.காடு அந்நியமாகிப் போய் மலைக்காடுகளிலேயே அகதிகளைப் போல வாழும் பழங்குடி மக்கள், வறுமை காரணமாக குறைந்த கூலிக்கு மரம் வெட்ட திருப்பதி, சேஷாசலம் காடுகளுக்கு லாரிகளில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 15 முதல் 20 நாட்கள் வரை வேலை தரப்படும் என்ற உத்தரவாதத்தோடு கங்காணிகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கே செம்மரங்களை வெட்ட விடுகிறார்கள். இது ஒரு வகை. இன்னொரு வகை செம்மரங்களைத்தான் வெட்டப் போகிறோம் என்று தெரிந்தே செல்கிறவர்களும் உண்டு. ஆனால் இவர்கள் எண்ணிக்கையில் மிக மிக குறைவு. பொதுவாக மரம் வெட்ட கும்பல் கும்பலாக செல்கிறவர்களில் சிலருக்குத்தான் செம்மரம் வெட்டச் செல்கிறோம் என்பது தெரியும். வேலூர் தொடங்கி தருமபுரி வரை இப்படி கூலிக்காக மரம் வெட்டச் செல்லும் மக்கள் அதிகம். அது அவர்களின் தொழில். அந்த தொழிலுக்கு இடையில் புகுந்தவர்கள்தான் பெரும் அரசியல் பின்னணி கொண்ட செம்மரக் கட்டைகள் கடத்தும் கும்பல்.
செம்மரங்கள்
பொதுவாக தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும், ஆந்திராவிலும் விளையும் செம்மரங்களுக்கு சர்வதேச சந்தையின் மதிப்பு அதிகம். வயலின் இசைக்கருவிகள் செய்யவும், சில மருந்துகளுக்கு பயன்படுத்தவும் செம்மரங்களை அதிக விலை கொடுத்து சீனா, ஐரோப்பிய, ஸ்காண்டிநேவிய நாடுகள் வாங்கிக் கொள்கின்றன. இதனால் அதிக லாபம் ஈட்டும் கொள்ளையர்கள் யார்? என்பது இதுவரை அறியாத ஒன்று. இதுவரை ஒரு செம்மரக் கடல் கும்பல் தலைவன் கூட கைது செய்யப்பட்டதில்லை. ஆனால் அதே நேரம் 2003-ல் ஆந்திர வனத்துறையினர் 2 பேர் செம்மர கும்பலால் கொல்லப்பட, ஆந்திர வனத்துறைக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டது.அதனுடைய விளைவுதான் இப்போதைய கொலைகள். சம்பவம் நடந்த பகுதியில் இறந்து கிடப்பவர்களின் உடல்களில் தீக்காயங்கள் உள்ளது. அவர்கள் போலீசாருடனான மோதலில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் குறைவு. அவர்கள் அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களே அதிகம். இதை ஆந்திராவின் அனைத்து எதிர்கட்சிகளும், சில இடது சாரி அமைப்புகளுமே சொல்கின்றன. இது தொடர்பாக ஆந்திர மாநில மனித உரிமை போரளிகளே உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்கள்.
தமிழர், தெலுங்கர் இன விரோதமா?
சேஷாசலம் வனத்தில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வை சில அமைப்புகள் இது தமிழர்கள் மீதான தெலுங்கர்களின் இன வெறுப்பு என்கிறார்கள். இன்னும் சிலரோ அவர்கள் திருடர்கள். அதனால் தமிழர்கள், தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றே சொல்லாதீர்கள் என்கிறார்கள். இந்த இரு பார்வைகளுமே அரசு வன்முறையை சகித்துக் கொள்ளும் செயலாகும். பெரும்பணம் கொழிக்கும் செம்மரக் கடத்தலில் அரசியல் பின்னணி உள்ளவர்கள் அப்பாவி ஏழைகளை தங்களின் சுரண்டல் தொழிலுக்கு பயன்படுத்தி பலி கொடுக்கும் இந்நிகழ்வை தெலுங்கர், தமிழர் விரோதமாக சுருக்கிப் பார்க்க முடியாது. 2012-ம் ஆண்டு இரண்டு வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் சென்னை வேளச்சேரியில் 5 வட மாநில இளைஞர்கள் நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதை வரவேற்று போலீசை பாராட்டி சிலர் போஸ்டர் ஒட்டினார்கள். ஆனால் அந்தக் கொலைகளின் பின்னால் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கொள்ளைகள் நடந்துள்ளன. வீட்டில், தெருவில், பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. ஐந்து பேர் கொல்லப்பட்டதோடு கொள்ளைகள் முடிந்து போனதா?அது போல இப்போது அப்பாவி கூலிகள் 20 பேர் கொல்லப்பட்ட உடன் செம்மரக் கடத்தல் தடுக்கப்பட்டு விடுமா? நமது அதிகார பீடங்கள் சாதி, பணம், அந்தஸ்து, அதிகாரம் ஏதுமற்ற ஏழைகளை பலி கொடுப்பதன் மூலம் தங்களின் பாவங்களைக் கழுவிக் கொள்கிறது. பரமக்குடி படுகொலைகள் என்றாலும், வேளச்சேரி படுகொலைகள் என்றாலும், தாமிரபரணி படுகொலைகள் என்றாலும், இப்போது நடந்திருக்கும் 20 பேர் படுகொலைகள் என்றாலும் இதுவே அதன் சாராம்சம்.
நன்றி :- விகடன் செய்திகள்
No comments:
Post a Comment