எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் உள்பட அனைத்து தரப்பினர் மீதும் வருமான வரி கடுமையாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. அதிக வருமானம் உடைய பிரிவினர் மீது கடுமையாக வரி விதிக்கப்படும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் கூறியிருப்பதன் மூலம் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது.பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் அவர் ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன், வருமானவரி முறையை இன்னும் வலுப்படுத்த அரசு தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார். வருமான வரி விகிதத்திற்கு மேலாக, சர்ச்சார்ஜ் என்ற பெயரில் கூடுதலாக வரிவிதிக்க திட்டமிட்டுவருவதாக தெரிவித்த அவர், கூடுதலான வருமானம் கொண்ட மக்கள் கூடுதலாக வரி செலுத்த தயாராகிக் கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டார். இந்தியாவில் மூன்று விதமாக வருமான வரி விகிதங்கள் அமலில்உள்ளன. 10 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற வீதங்களில் வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த விகிதங்களை 1997ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வரையறை செய்தார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்பது நடுத்தர மக்களின் பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால் இந்த முறை பட்ஜெட்டில் அத்தகைய அறிவிப்பு இருக்காது என்பது மட்டுமல்ல; வருமான வரி விகிதம் கடுமையாக்கப்படும் என்பது ரங்கராஜனின் பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சி.ரங்கராஜன் கூறியுள்ளார். பொதுச்செலவினங்களை பெரிய அளவிற்கு குறைக்க வேண்டியுள்ளது என்று கூறிய அவர், வருவாயை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் செலவினத்தை குறைக்க வேண்டுமானால் பல்வேறு வடிவங்களில் அளிக்கப்பட்டுவரும் மானியங்களை வெட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.2013-14 பட்ஜெட் எந்த திசைவழியில் அமையும் என்பதற்கு ரங்கராஜனின் இந்தப்பேட்டியே முன்னோட்டம் என பொருளாதார நோக்கர்கள் கூறுகின்றனர்.
நன்றி :-தீக்கதிர்
No comments:
Post a Comment