Wednesday, July 16, 2014

உலக வங்கியை புரட்டிப் போட வரும் இந்தியா, சீனா, ரஷ்யாவின் 'பிரிக்ஸ் ' வங்கி!

உதயமானது பிரிக்ஸ் வங்கி 
பஞ்சப்பாட்டில் இருந்து வெளியே வந்த 5 நாடுகள்...:  உலக வங்கியிடம் முதன்முதலில் கடன் கேட்டவை பிரான்ஸ், போலந்து, சிலி ஆகிய நாடுகள் தான். இதில் பிரான்சுக்கே முதலில் கடன் தருவோம் என்றார் அப்போதைய உலக வங்கித் தலைவரான அமெரிக்கர் ஜான் மெக்லாய். அத்தோடு அமெரிக்க மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தது. கடன் வேண்டுமென்றால் பிரான்ஸ் அரசில் உள்ள கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்க வேண்டும் என்றது. இதற்கு பிரான்ஸ் ஒப்புக் கொண்டதோடு கம்யூனிஸ்ட்டுகளை கழற்றிவிட்டுவிட்டு கடனை வாங்கிக் கொண்டு போனது. இது தான் உலக வங்கியின் 'அரசியல் வரலாறு'.அதே போல இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச அளவில் நாடுகளின் நிதி செலுத்தும் முறைகளை (International payment system) சீரமைக்க உருவாக்கப்பட்டது தான் சர்வதேச நாணய நிதியம். பெரும்பாலும் ஏற்றுமதி- இறக்குமதியில் அமெரிக்க டாலர்களே புழக்கத்தில் உள்ளதால், டாலர் புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவே இதை இன்னும் பல சோஷலிஸ நாடுகள் பார்க்கின்றன. இந்த அமைப்பு சர்வதேச வர்த்தகம், நாடுகளின் டாலர்கள் கையிருப்பு ஆகிய விஷயங்களில் உதவுவதோடு டாலர் பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகளுக்கு தங்களது இறக்குமதிக்காக கடன் கொடுத்தும் உதவுகிறது. ஆனால், இங்கேயும் கம்யூனிஸ்டுகளை அடக்குகிறோம் என்று கியூபாவை விரட்டிவிட்டனர். அதே போல சீனாவின் இடத்தை தைவானுக்குத் தந்தனர். ஆனால், சீனா கடும் சண்டை போட்ட பின்னரே மீண்டும் இடம் கிடைத்தது. இவ்வாறாக உலக வங்கியிலும் சர்வதேச நாணய நிதியத்திலும் 188 நாடுகள் இடம் பெற்றிருந்தாலும், இந்த அமைப்புகளின் பெயரில் தான் 'உலகம்', 'சர்வதேச' ஆகிய வார்த்தைகள் உள்ளனவே தவிர, உண்மையில் இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நலன்களையே மையமாகக் கொண்டு செயல்பட்டன . வளர்ந்து வரும் நாடுகள் இந்த அமைப்புகளின் நிதியுதவியை சார்ந்தே இருந்ததால், உலகளவில் அமெரிக்க, ஐரோப்பிய ஆதிக்கம் தடையில்லாமல் பரவியது. இவ்வாறு பல்லாண்டுகால பஞ்சப்பாட்டில் இருந்து வெளியே வந்த 5 பேரும் (இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் அமெரிக்கா) இணைந்த கைகளாய் மாறி உருவாக்கிய அமைப்பு தான் பிரிக்ஸ் அமைப்பு (BRICS- Brazil, Russia, India, China, and South Africa). உலக மக்கள் தொகையில் பாதிப் பேர், சுமார் 300 கோடி பேர், இந்த 5 நாடுகளில் தான் வசிக்கின்றனர். உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 5ல் 1 பங்கு இந்த நாடுகளைச் சார்ந்தது. உலகின் மொத்த வர்த்தகத்தில் 6.14 ட்ரில்லியன் டாலர்கள் இந்த 5 நாடுகளிடையே நடக்கிறது. உலக வர்த்தகத்தில் இது 17 சதவீதம். இந்த 5 பேரும் ஒன்று சேர்ந்தது, உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இங்கு தான் இருக்கோம் என்று மார்தட்டிக் கொள்ள அல்ல. உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கா- ஐரோப்பாவிடம் இருந்து மீட்டு எடுக்கவே. குறிப்பாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்துக்கு மாற்றாக ஒரு உலகளவிலான மாற்று வங்கியை உருவாக்கவே. அதைத் தான் நேற்று செய்து காட்டியுள்ளன பிரிக்ஸ் நாடுகள். இந்த 5 நாடுகளும் இணைந்து 50 பில்லியன் டாலரைப் போட்டு ஒரு வங்கியை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன. ஒரு பில்லியன் என்பது சுமார் ரூ. 6,000 கோடி. ஆக, ரூ. 3 லட்சம் கோடியை முதலீடாக வைத்து இந்த வங்கி உருவாக்கப்படவுள்ளது. இந்த முதலீட்டை வருங்காலத்தில் 100 பில்லியன் டாலராக, அதாவது ரூ. 6 லட்சம் கோடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளன. வ்வளவு பெரிய பண விவகாரம் என்பதால் முதலில் பிரிக்ஸ் நாடுகள் வங்கியை உருவாக்குவதில் வேகம் எதையும் காட்டவில்லை. ஆனால், பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்ட அமெரிக்கா கடந்த ஆண்டு தனது பொருளாதாரத்தை வலுத்தப்படுத்திக் கொள்ளும் திட்டத்தில் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்களுக்கு தந்து வந்த அரசு உதவியை நிறுத்தியது. இதையடுத்து அமெரிக்க அரசின் பங்குகளில் முதலீடு செய்ய உலகளவில் போட்டி கிளம்பியது. மாபெரும் முதலீட்டாளர்கள் இந்தியா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் பங்குச் சந்தைகளில் செய்திருந்த முதலீடுகளை (டாலர்கள் என்று படிக்கவும்) எல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு அமெரிக்கா பக்கம் ஓட, இந்தியா, ரஷ்யா, பிரேசில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. இவ்வாறு விடிந்தாலே டாலருக்கு திருவோடு தூக்கிக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று யோசித்த 5 நாடுகளும் பிரிக்ஸ் வங்கியை உருவாக்குவதை விரைவுபடுத்தின. நேற்று பிரேசிலில் வைத்து இந்த வங்கியின் துவக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. 5 நாடுகளுக்கும் திடீர் திடீரென ஏற்படும் டாலர் பஞ்சத்துக்கு இந்த 50 பில்லியன் டாலர் இருப்பு பெரும் உதவியாக இருக்கும். இந்த 50 பில்லியன் டாலர் தவிர இந்த 5 நாடுகளும் இணைந்து 100 பில்லியன் டாலர் அவசர கால நிதியையும் (Contingent Reserve Arrangement) உருவாக்க உள்ளன. டாலருக்கு எதிராக ஏதாவது ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பு மிக வேகமாக சரியும்போது இந்த அவசரகால நிதி பயன்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட நாட்டின் கரன்சிகளை இந்த அவசரகால நிதி வாங்கிக் கொண்டு டாலர்களைக் கொடுத்து, அந்த நாட்டின் கரன்சி சரிவை கட்டுப்படுத்தும். இதில் 41 பில்லியன் டாலர் சீனாவிடம் இருந்து வரப் போகிறது. உலகிலேயே மிக அதிகமான அமெரிக்க டாலர்களை அன்னிய செலாவணியாக வைத்துள்ள நாடு, அமெரிக்கா அல்ல, சீனா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு பணத்தை அமெரிக்க டாலர் பங்குகளில் போட்டு வைத்துள்ளது. இந்த அவசரகால நிதிக்கு இந்தியா, ரஷ்யா, சீனா ஆகியவை தலா 18 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளன. தென் ஆப்பிரிக்கா 5 பில்லியன் டாலரை முதலீடு செய்யும். சீனா தனக்கு எப்போது தேவைப்பட்டாலும் தான் போட்ட பணத்தில் பாதியை, அதாவது 20.5 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம். தென் ஆப்பிரிக்கா தான் போட்ட பணத்தைப் போல இரு மடங்கு பணத்தை, அதாவது 10 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம். இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை தாங்கள் போட்ட பணமான 18 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம். அதே போல 100 பில்லியன் டாலர் அவசர கால நிதியில் இருந்து சீனா தனக்குத் தேவைப்படும்போது தான் போட்ட பணத்தில் பாதியை எடுத்துக் கொள்வோம் என்று சொன்னதை இந்தியாவும் பிரேசிலும் ஏற்கவில்லை. ஆனால், சீனா பிடிவாதம் பிடித்ததால் இந்தியாவும் பிரேசிலும் விட்டுக் கொடுத்தன. அதே நேரத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சீனாவைச் சேர்ந்த யாருக்கும் வங்கியின் தலைவர் பதவி தரப்படாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை சீனா ஏற்றுக் கொண்டது. அதே போல வங்கியின் தலைமையகம் சீனாவில் அமைக்க இந்தியாவும், முதல் தலைவர் பதவி இந்தியாவுக்குத் தர சீனாவும் ஒப்புக் கொண்டுவிட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் கடைசி நேரம் வரை கூட சிக்கல் தொடர்ந்தது. இதனால் இந்த பிரிக்ஸ் மாநாட்டில் வங்கி உருவாக்கப்படுவதே கூட சந்தேகத்துக்கு இடமானது. ஆனால், கடைசி 10 நிமிடங்களில் இரு தரப்பும் சில விட்டுக் கொடுத்தல்களைச் செய்ய வங்கி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுவிட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் டில்மியா ரெளசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா ஆகியோர் பிரேசிலின் போர்டலேஸா நகரில் கையெழுத்துப் போட்டனர். 50 மில்லியன் டாலர் வங்கி...:
இந்த வங்கியிலிருந்து உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியைப் பெற முடியும். இந்த வங்கி தவிர 5 நாடுகளும் இணைந்து பிரிக்ஸ் பங்கு கூட்டமைப்பையும் (BRICS Stock Alliance) உருவாக்கவுள்ளன. இதன்மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த 5 நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது எளிதாக்கப்படும். 2016ம் ஆண்டு முதல் இந்த பிரிக்ஸ் வங்கி செயல்பாட்டுக்கு வரும். இந்த வங்கியை உருவாக்குவதில் மிகத் தீவிரம் காட்டியது ரஷ்ய அதிபர் புடின் தான். அப்படி என்ன ரஷ்யாவுக்கு டாலர் பற்றாக்குறையா என்றால் இல்லை. அந்த நாட்டிடம் சுமார் 500 பில்லியன் டாலர்கள் கையிருப்பு உள்ளது. தினந்தோறும் எண்ணெய் ஏற்றுமதியால் டாலர்கள் குவிந்து கொண்டுள்ளன. ஆனால், அமெரிக்காவுக்கு எதிராக, அமெரிக்காவின் சார்ந்த நிதி அமைப்புகளுக்கு எதிராக ஒரு பலமான எதிர் அணியை உருவாக்குவதே அவரது ஒரே குறிக்கோள். இதைத் தான் செய்து காட்டியுள்ளார் புடின். புடினின் இந்த அரசியலால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் லாபம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
                                   < நன்றி :- ஒன் இந்தியா
No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...