Friday, December 21, 2012

நாடாளுமன்றம் நோக்கி பேரணி...

          காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் - மத்திய மாநில அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கலந்து கொண்ட நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியால் வியாழனன்று தில்லி மாநகரமே ஸ்தம்பித்தது.

          இப்பேரணிக்கு ஐஎன்டியுசி,சிஐடியு, ஏஐடியுசி, யுடியுசி, எச்.எம்.எஸ்., உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தன.

          நாடாளுமன்ற வீதியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணி - ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே பத்மநாபன், பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி., ஏஐடியுசி பொதுச்செயலாளர் குருதாஸ்தாஸ் குப்தா எம்.பி., அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் சுகுமால் சென், தொழிலாளர் முன்னேற்ற சங்கபொதுச்செயலாளர் எம். சண்முகம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

          பேரணியின்போது தீக்கதிர் செய்தியாளரிடம் ஏ.கே. பத்மநாபன் கூறியதாவது :
          “வருகிற 2013 பிப்ரவரி 20-21 அன்று நாடெங்கிலும் உள்ள அனைத்துத்துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் மத்திய அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று (டிசம்பர் 20ஆம் தேதி) நாடாளுமன்றம் நோக்கி நடைபெறுகிற இப்பேரணி - ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்களும், தேசிய சம்மேளனங்களின் ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருப்பதானது, பிப்ரவரி 20-21 வேலை நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது.

          மத்திய அரசினுடைய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து 2009 முதல் நடைபெற்று வரும் போராட்டங்களினுடைய தொடர்ச்சிதான் இது. நேற்றும், நேற்றைக்கு முன்தினமும் (டிசம்பர் 18-19)- பல்வேறு மாநிலங்களிலும் சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டம் என நடைபெற்ற போராட்டங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறுகிற இந்தப் பேரணியும் பிப்ரவரி 20-21 நடைபெற விருக்கும் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. 

          மத்திய அரசைப் பொறுத்தமட்டிலும் அது தொழிலாளர்களுடைய, ஊழியர்களுடைய கோரிக்கைகளைப்பற்றி, பிரச்சனைகளைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை. இதே நாளில் நாடெங்கிலும் உள்ள வங்கித்துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து வங்கித்துறையில் ‘சீர்திருத்தம்’ என்ற பெயரால் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை அழிப்பதை எதிர்த்தும், இந்திய வங்கித்துறையை தனியார், பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கக்கூடிய நடவடிக்கையை எதிர்த்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

          பல்வேறு மாநிலங்களிலும் ஓய்வூதியம் கோரியும், கடந்த டிசம்பர் 12 அன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் மற்ற கோரிக்கைகளுக்காகவும் போராடியிருக்கிறார்கள். சென்ற டிசம்பர் 15 அன்று சென்னையில் மத்திய பொதுத்துறையைச் சார்ந்த சங்கங்களின் சார்பில் பிப்ரவரி 20-21 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

          மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் என அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் நடத்திடும் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி, நிச்சயமாக வரும் பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெறவிருக்கிற வேலை நிறுத்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தமாக அமையும் என்பது நிச்சயம்.’’ 
நன்றி :- தீக்கதிர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...