Monday, August 11, 2014

இரண்டாவது கோடம்பாக்கத்தில் உலகத் திரைப்பட விழா!


         உலகத்திரைப்பட விழாக்கள் என்றாலே,இந்தியாவின் முக்கியப்பெருநகரங்களில்தான் நடக்கின்றன.அப்படி...இருக்க தமிழகத்தின் சிறுநகரங்களில் உலகத்திரைப்படவிழாக்கள் நடந்து, மக்களிடையே பல்வேறு கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் பரிமாறினால்...அது எப்படி இருக்கும்? .அந்த எண்ணம் ஈடேறியிருக்கிறது தேனியில்.ஆம். தமிழகத்தில் மொழி சார்ந்த, இசை சார்ந்த, படைப்பு சார்ந்த விசயங்களில் தமிழ் சினிமாவை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல துடிக்கின்ற பல ஆளுமைகளைத் தந்த, மதுரைத்தாயின் வயிற்றில் பிறந்த, சினிமாவின் காதலர்கள் அதிகம் வாழுகின்ற, வாழ்வின் யதார்த்த உரிமைகளை விட்டுக் கொடுக்காத, இரண்டாவது கோடம்பாக்கம் என அழைக்கப்படுகின்ற தேனி மாவட்டத்தில், இயற்கை எழில் மிகுந்த பள்ளத்தாக்கான கம்பத்தில் உலகத்திரைப்பட விழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.இங்கு 5 நாட்களில் 11 நாடுகளின் 25 திரைப்படங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன.ஒரு படைப்பு, எங்கே புனிதப்படுகிறது என்றால் ஒரு கடைக்கோடி ரசிகன், அதை ரசித்து, சிலாகித்து, மனமுவந்து பாராட்டும்போதுதான் என்பார்கள். அப்போதுதான் பாராட்டும் பெரிதாக இருக்கும்...படைப்பும் மரியாதைக்குரியதாகக் கருதப்படும். அத்தகைய ஒரு கடைக்கோடி சினிமா ரசிகனுக்கு உலக சினிமாவை கொண்டு சேர்த்திருக்கிறது, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் உப பிரிவான 'திரையியக்கம்'.இது இவர்கள் நடத்தும் 4வது உலகத்திரைப்பட விழாவாக இருந்தாலும், கம்பம் நகரவாசிகளுக்கு இதுதான் வரலாற்றில் முதல் முறை. 


இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர் 
 சங்க பொதுச்செயலர்:சாகித்திய அகாதமி 
விருதுபெற்ற சு.வெங்கடேசன் கூறும் போது, "உலகத்திரைப்பட விழாவை த.மு.எ.க.சங்க சார்பில், நாலு வருசமா நடத்திட்டு இருக்குறோம். முதல் இரண்டு வருடம் சென்னையில் நடத்தினோம். பொதுவா திரைப்படவிழானாலே சென்னை, திருவனந்தபுரம், கோவா போன்ற பெருநகரங்கள்லதான் ,நடத்தணுமா...? ஏன் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகள்ல...நடத்தக்கூடாது? னுன்ற யோசனையிலதான்..போன ஆண்டு சினிமா நூற்றாண்டை முன்னிட்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவாக..பட்டுக்கோட்டையில் திரைப்படவிழா..நடத்தினோம்.இந்த ஆண்டு வந்து கம்பத்துல நடத்துறோம். குறிப்பா...இன்று வந்து திரைப்படம் சார்ந்து, அல்லது ஊடகம் சார்ந்து ஒரு பெரிய கனவோடு செயல்படுகிற பெரும் இளைஞர்கள் கூட்டம் எல்லா நகரங்களிலுமே உருவாகியிருக்காங்க. அவர்களுக்கு உண்டான தீனிய செஞ்சு கொடுக்கிற தேவையிருக்கு. த.மு.எ.க.ச ஒரு நல்ல ரசனை கொண்ட இளைஞர்களை உருவாக்குவதற்கான களத்தை அமைச்சுட்டுருக்கு....அதுல ஒரு பகுதியாத்தான்..கம்பத்துல நாங்க நடத்துற உலகத்தரைப்படவிழா!" என்றார்.

மேலும் இவ்விழாவில் கலந்து கொள்ள வந்த சமுத்திரக்கனி (நடிகர்-இயக்குனர்) நம்மிடம் பேசியபோது, "தமிழ்நாட்டில..கடைக்கோடி கிராமத்துல, இந்த உலகத்திரைப்படவிழா நடத்துறதே பெரிய முயற்சிதான். நேற்று, "பிடல் காஸ்ட்ரோ-கமாண்டென்ட்" படம் திரையிட்டபோது ,பாமர ரசிகன் கைத்தட்டி ரசிக்கிறான்...நாமதான் அவனுக்கு ஒண்ணுமே புரியலைன்னு நெனச்சுகிட்டு சப்டைட்டில் எல்லாம் போட்டுட்டு இருக்குறோம்...ஆனா ..பாமரன் நம்மளத்தாண்டி அந்த படத்தில உள்ள போயிட்டான்றதுதான் உண்மை. இது நம்மளோட அறியாமைதான்"-என சிலாகித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சுருளிப்பட்டி சிவாஜி (வசனகர்த்தா), "கலை மற்றும் இலக்கியம் சார்ந்தவிழிப்புணர்வு மக்கள்ட்ட ஏற்படுத்துறதுக்காக நடக்கிற இந்த விழா பாமர மக்கள்ட்ட போய் சேர்ந்துருக்கு. இங்க எல்லா காட்சிகளும் நிறைவா (ஹவுஸ்ஃப்ல்) போறதுதான் இதுக்கு சாட்சி" என விழா குறித்து மக்களிடம் உள்ள வரவேற்பினை நம்மிடம் பகிர்ந்தார்.5 நாட்கள் நடக்கவிருக்கும் இவ்விழாவில் இரண்டாம் நாளான நேற்று எழுத்தாளர் பாஸ்கர்சக்தி, ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், சுருளிப்பட்டி சிவாஜி மற்றும் நடிகர் பூ ராமு, இயக்குனர் எம்.சிவக்குமார், இயக்குனர் சமுத்திரகனி மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
                                 <நன்றி : விகடன் செய்திகள் >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...