தொலைத் தொடர்புத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 140 தொழிலாளர்களை வேலூர் மாவட்ட நிர்வாகம் 1.8.2014 முதல் பணி நீக்கம் செய்தது. அதாவது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றால் கொத்தடிமைகள் என்றும் அவர்களின் வயிற்றில் அடிக்கவும் தயங்கமாட்டோம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் செயல்பட்டது.தாக்குண்டால் மண் புழுவும் துள்ளி எழும். நாங்கள் சாக்கடை புழுக்களல்ல. சரித்திரத்தின் சக்கரங்கள்' எனக்கூறி வேலை நீக்கம் செய்யப்பட்ட அன்றைய தினத்தில் இருந்து 7 நாட்கள் வேலூரில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர் ஒப்பந்த தொழிலாளர்கள்.நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆதரவு போராட்டம் நடத்தினர். அப்போதும் அசைவு இல்லை. நிரந்தர தொழிலாளர்களும் ஆதரவு கரம் நீட்டினர். ஆனால், நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனையை ஊழியர் சங்கம் கையில் எடுக்கக்கூடாது எனவும் கடிதம் கொடுத்து மிரட்டிப் பார்த்தது..பிஎஸ்என்எல் நிர்வாகம் கொடுத்த கடிதத்தை நிராகரித்த பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், டிஎன்டிசிடபுள்யு சங்கமும் திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்துவோம் என்று அறிவித்தது.அதன்படி செப். 15 அன்று சென்னை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயலாளர் சி. செல்லப்பா, உதவி செயலாளர் பாபுராதாகிருஷ்ணன், டிஎன்டிசிடபுள்யு மாநிலத் தலைவர் எம். முருகையா, மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார் ஆகியோர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து ஏராளமான ஊழியர்கள் வந்திருந்தனர். இப்போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத், ஏஐபிஎஸ்என்எல்இஏ அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகலத் ராய், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் புனிதா உதயகுமார், கோவிந்தராஜ், காசி,கோபிநாதன்,சி.கே. நரசிம்மன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே வந்தது. இதனையடுத்து, 3ம் நாள் போராட்டத்திற்கு பிறகு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பிஎஸ்என்எல் முதன்மைபொது மேலாளர் ஜி.வி.ரெட்டியுடன் நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநிலநிர்வாகம் வேலூர் மாவட்டத்தில் பணியில் இருந்துநீக்கப்பட்டதில் 85 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணிக்கு எடுத்துக்கொண்டது. மீதமுள்ள தொழிலாளர்களையும் மிக விரைவில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணிக்கு எடுத்துக்கொள்ளவும் உறுதியளித்தது.இத்தோடு, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே சீராக ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனையை கையாளப்படும் என்றும் நிர்வாகம் உறுதி கொடுத்தது.இந்த மகத்தான வெற்றிக்கு ஊழியர் சங்கங்களின் துணையும் சரியான நேரத்தில் போராட்டத்தை சரியாக நடத்தியது தான் காரணம். ஆதரவு கொடுத்த அனைவருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயலாளர் சி. செல்லப்பா நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
நன்றி :- தீக்கதிர்
நன்றி :- தீக்கதிர்
No comments:
Post a Comment