Wednesday, May 20, 2015

மோடி ஓராண்டில் சாதித்தது, சந்தித்தது என்ன?

வாசகர் பக்கம் 
'எப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறீர்கள் மிஸ்டர் பி.எம்.' என்று 56 நாள் லீவில் போய் திடீரென வந்து அறிக்கை கொடுத்து அசத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், கிண்டல் செய்யும் அளவுக்கு பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மே 26, 2014 அன்று பிரதமராக பதவி ஏற்ற மோடி கடந்த ஓராண்டில் சாதித்தது என்ன? சந்தித்தது என்ன? சாதனை என்ன? மக்களின் வேதனை என்ன?மோடியின் முதல் கோ(வே)ஷம் தூய்மை இந்தியா. 'கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை எல்லோரும் துடைப்பமும், கையுமாக அலைந்தார்கள் சில நாளைக்கு. சிலர் ஊரில் இருந்த குப்பையை கொண்டு வந்து கொட்டி கூட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். கிரிக்கட் வீரர், நடிகர் மற்றும் கவுன்சிலர் முதல் கலெக்டர் வரை கிளீன் பண்ணியே தீருவது என கங்கணம் கட்டி துடைப்பத்துடன் வீதியில் நின்றது சில நாட்களுக்குத்தான். அப்புறம் அந்த படம் ஏன் பெட்டிக்குள் போனது என தெரியவில்லை. இதனால் அப்போது துடைப்பம் வியாபாரிகள் பயனடைந்தார்கள் எனபது தான் அந்த திட்டம் கண்ட பலன் போலும்.
திடீர் இட்லி, திடீர் போண்டா மாதிரி, திடீர் சாமியார்கள் அவ்வபோது உதிர்த்த கருத்துக்கள் சிரிப்பு வெடி. இந்துகள் குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆரம்பித்து, கோட்சே தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தார், காந்தி காட்டி கொடுத்தார் என்ற அளவுக்கு பேசி, குலுங்க குலங்க காமெடி சரவெடிகள் இந்த ஒருவருடத்தில் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.இவ்வளவு சர்ச்சைகள் இருக்கும் போது மோடி இதை பற்றி நாடாளுமன்றத்தில் வாய் திறக்கவில்லை, 'ஒரு வார்த்த பேச ஒரு வருடம் காத்திருந்தேன்' எனபதை உண்மையாக்கும் வகையில் ஒரு நாள் திருவாய் மலர்ந்தார். சர்ச்சை கருத்துகளுக்கு இடைவேளை விடப்பட்டது. அடுத்து ஏதாவது புது மசோதா தாக்கல் செய்யும் போது திசை திருப்ப இவர்கள் திடீரென தோன்றி பிரச்னை கருத்துகளை பரப்பலாம்.

கருப்பு பணம் மீட்கப்பட்டு உங்கள் கணக்கில் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி என்னாச்சு? என கேட்டதற்கு அது ஒரு அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது என்றார் அருண் ஜெய்ட்லி. இது அந்தர் பல்டி. ஆதார் அட்டை ஆபத்து, நாட்டின் பாதுகாப்புக்கே வேட்டு என எதிர்கட்சியில் இருக்கும்போது சொன்ன பா.ஜ.க. ஆதார் தான் இனி எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்று மந்திரம் சொல்லி மானியங்களை வெட்ட இதை பயன்படுத்தும் பா.ஜ.க. அடித்தது ஆகாச பல்டி.காக்காய் உட்கார பனம் பழம் விழுந்ததுபோல் பெட்ரோல் விலை குறைந்ததும், அந்நிய முதலீடுகள் பங்கு சந்தைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்க அம்சங்கள். அந்நிய முதலீடுகள் எந்நேரமும் வாபஸ் ஆகும் வாய்ப்பும் உள்ளது.இதில், சில மசோதாக்கள் படும்பாடு தான் சொல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு மசோதா தாக்கல் நிலையில் வாபஸ் ஆனது. நிலகையகபடுத்தும் மசோதாவை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது பா.ஜ.க. சில மசோதாக்கள் மக்களுக்கு நன்மை கொடுப்பதாக இருந்தபோதிலும் பெரும்பாலானவை, பெருநிறுவனங்களின் பாதுகாவலர் மோடி என்ற அச்சத்தை மக்களிடம் தோற்றுவித்து விட்டன. மொத்தத்தில் சொல்லப்போனால் பிரதமர் மோடியின் ஆட்சி எதையோ பிடிக்க போய், எதுவோ ஆனது போல் ஆகி விட்டது.இந்த ஒருவருட ஆட்சிக்கு உதாரணமாக ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் சந்தானம் சொல்வது போல், அலைபாயுதே மாதவன் மாடுலேஷன்ல பேசச்சொன்னா, உன்னை யார் அரண்மனைக்கிளி ராஜ்கிரண் மாதிரி பேசச்சொன்னது? என்ற டைலாக் தான் ஞாபகம் வருகிறது!
                        நன்றி :- விகடன் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...