Saturday, May 17, 2014

தேர்தல் முடிவுகள் உணர்த்தும்திட்டவட்டமான செய்திகள்

         உலகமே எதிர்பார்த்த 16வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் சில செய்திகளைத் திட்டவட்டமாக உணர்த்துகின்றன. வெளித்தோற்றத்தில் காங்கிரஸ், பாஜக அணிகளுக்கிடையேயான மோதல் போலத் தெரிந்தாலும், அடிப்படையில் இது நாட்டின் பொருளாதாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் பெருமுதலாளித்துவ அணிக்கும், உழைக்கும் வர்க்க அணிக்கும் இடையேயான போட்டிதான். வெவ்வேறு கட்சிகளாக நின்றாலும், உண்மையில் அந்த மகா சுரண்டல் சக்திகளுக்கு சேவை செய்வதில் முதல் படிக்கட்டில் இருப்பது யார்என்ற போட்டிதான் அந்த அணிகளின் கட்சிகளுக்கிடையே நடந்தது. உழைக்கும் மக்களுக்காக இடதுசாரி கட்சிகள் களம் கண்டன.எனினும் காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள் பாஜகவுக்கு உதவியுள்ளன என்பதே உண்மை. “பொருளாதார நிபுணர்” மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் தொண்டாற்றுவதே லட்சியமாகத் திணித்த பொருளாதாரக் கொள்கைகளின் நாசகர விளைவுகளால் எளிய மக்கள் பெருந்துயரங்களையே சந்திக்க வேண்டியதாயிற்று. குறையாத விலைவாசி, பெருகாத வேலைவாய்ப்பு, ஓயாத தொழில் நெருக்கடி, மீளாத விவசாய வீழ்ச்சி, நியாயமற்ற கல்வி வியாபாரம் என பல சுமைகளை சுமக்க வேண்டியதாயிற்று. அந்த அதிருப்திகளை பாஜக அறுவடை செய்யும் என்ற எச்சரிக்கைகளையும் காங்கிரஸ் புறக்கணித்தது.நரேந்திர மோடி என்ற தனிமனிதர் அனைத்தையும் மாற்றிப்போட அவதாரம் எடுத்திருப்பதான மாயையை அதே கார்ப்பரேட் சக்திகள் திட்டமிட்ட முறையில் தொடர்ந்து உருவாக்கி வந்தன. அவர்களைப் பொறுத்தவரையில், மன்மோகனை பிரதமராக்கிய நோக்கம் ஓரளவுக்கு நிறை வேறியிருக்கிறது- பொதுத்துறைகள் சீர்குலைப்பு, பெட்ரோலிய விலை நிர்ணயத்தை சந்தை சக்திகளிடமே விடுவது, அந்நிய நேரடி முதலீட்டுக்குக் கதவு திறப்பு, ஓய்வூதியத்தைப் பங்குச் சூதாட்டமாக்குவதற்கான வழி போன்ற சில அடிப்படை யான ஏற்பாடுகளை ஐ.மு.கூ. அரசு விசுவாச மாகச் செய்துகொடுத்தது.இதையடுத்து, மேன்மேலும் தங்குதடையற்ற சுரண்டலுக்கு ஏதுவாக, மக்களின் ஆவேசத்தைத்தை  திசை திருப்பக்கூடியவராக மோடியை முன்னிறுத்தினார்கள். கார்ப்பரேட் உலகம்தான் இதைத் தீர்மானிக்கிறது என்பதற்கு ஒரே சான்று, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என வெளியிடத் தொடங்கியதிலிருந்தே பங்குச் சந்தைப் புள்ளி மிக உச்சத்திற்குச் சென்றதுதான். முன்பு மன்மோகன் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரத்திலும் இதுதான் நிகழ்ந்தது. உலகின் பல பகுதிகளில் மதவாதத்தையும் இனவாதத்தையும் முன்னிலைப்படுத்துகிற வலதுசாரி சக்திகள் அரசியலில் ஆதிக்கம் பெறுகின்றன. அதன் பிரதிபலிப்பாகவே இந்தியாவில் நிகழ்வதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.மதச்சார்பின்மை, சமூகநீதி, பாலின சமத்துவம், கருத்துச் சுதந்திரம், தொழிலாளர் நலன்கள்,சிறு தொழில்கள் பாதுகாப்பு, உறுதியான வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் என அனைத்துத் தளங்களிலும் நெடும் போராட்டங்கள் காத்திருக்கின்றன. மக்கள் இயக்கங்களுக்கு - குறிப்பாக இடதுசாரிகளுக்கு - வரலாறு விடுத்துள்ள கடமை இது. உண்மைகளை மக்கள் முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டிய பொறுப்போடும் இணைகிற கடமை அது.
                                 <நன்றி : தீக்கதிர் >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...